கங்னா ரனாவத் நடிப்பில் வெளியான ’தலைவி’ படத்தை விநியோகித்த, சீ ஸ்டுடியோஸ், முன்பணமாக கொடுத்த ரூ. 6 கோடியை, தயாரிப்பு தரப்பிடம் இருந்து பெற்றுத் தரக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் விஜய் இயக்கத்தில் 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’தலைவி’. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்பான கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த படத்தை சீ ஸ்டுடியோஸ் விநியோகம் செய்தது. இந்த படம் எதிர்பார்த்த வசூலை தரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சீ ஸ்டுடியோஸ் ரூ. 6 கோடியை முன்பணமாக,படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் கொடுத்துள்ளது. கடந்த 2 வருடங்களாக , சீ ஸ்டுடியோஸ் இ-மெயில் மற்றும் செல்போன் அழைப்பு மூலம் இந்த பணத்தை கொடுக்கும்படி கேட்டு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை என்பதால், சீ ஸ்டுடியோஸ் நீதிமன்றத்தை நாட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாகவும், ஆனால் ஒட்டுமொத்தமாகவே 1.46 கோடி மட்டுமே, இப்படம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதேவேளையில் உலகம் முழுவதும் வெளியான, இப்படம் ரூ.4 கோடியை வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான தாகட் திரைப்படமும் வசூல் ரீதியாக சரிவை சந்தித்துள்ளது. தமிழ் திரைப்படமான சந்திரமுகி 2 திரைப்படத்தில் கங்னா ரனாவத் நடிக்கிறார். இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். இதை பி.வாசு இயக்குகிறார்.