பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூர்யாவின் கங்குவா விக்ரமின் தங்கலான் ஆகிய படங்கள் எப்போது வெளியாகும் என்பது குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் படம் கங்குவா. சூர்யா நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சூர்யா 42 என்று தங்காலிகமாக பெயரிடப்பட்ட இந்த படத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு டைட்டில் வைக்கப்பட்டு அது தொடர்பாக இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதேபோல் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் தங்கலான். கே.ஜி.எஃபில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முன்தினம் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த இரண்டு படங்களும் எப்போது வெளியாகும் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில், பேசிய திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இது தொடர்பாக கூறியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னையில் நடந்த சிஐஐ தக்ஷின் தென்னிந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு 2023 இல் பேசிய ஞானவேல், கங்குவா மற்றும் தங்கலான் இரண்டும் 2024 ஆம் ஆண்டின் திருவிழா வெளியீடுகளாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
சூர்யாவின் கங்குவா அவரது அதிக பொருட்செலவுப் படங்களில் ஒன்று என்று கூறப்படுகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானியும் நடிக்கிறார். முன்னதாக ஒரு பேட்டியில், படத்தின் இயக்குனர் சிவா தனது படத்தின் தலைப்பின் அர்த்தத்தை விளக்கினார். கங்கு என்றால் தமிழில் ‘நெருப்பு’ என்றும், கங்குவா என்பது நெருப்பைக் கையாளக்கூடிய நபரைப் பற்றியது என்றும் சிவா கூறினார். மேலும் “புராணக் கதைகள் போன்ற அமைப்பு இது ஒரு கற்பனை என்று யாரையாவது நம்ப வைக்கலாம். இருப்பினும், கங்குவா ஒரு கற்பனைப் படம் அல்ல, சூர்யா சாரின் கதாபாத்திரத்திற்கு எந்த வல்லமையும் இல்லை, ”என்று அவர் கூறியிருந்தார்.
பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவாகும் முதல் படம் தங்கலான். பத்தாண்டுகளுக்கு முன்பு கோலார் தங்க வயல்களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம் தவிர, பார்வதி திருவோடு, மாளவிகா மோகன், பசுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். விக்ரம் கடைசியாக மணிரத்னத்தின் பிளாக்பஸ்டர் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் சோழ இளவரசன் ஆதித்த கரிகாலனாக நடித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil