பிரபல கன்னட நடிகரும், முன்னாள் மத்திய மாநில அமைச்சருமான அம்பரீஷ், பெங்களூருவில் நேற்று இரவு காலாமானார். அவருக்கு வயது 66.
சிறுநீரக நோய் காரணமாக, வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் அம்பரீஷ், உடல்நிலை தேறிய நிலையில் பெங்களூருவில் தனது வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு திடீரென்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இரவு 11 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
கன்னடத்தில் இருநூறு படங்களுக்கு மேல் நடித்துள்ள அம்பரீஷ், மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். நடிகை சுமலதாவின் கணவரான இவர், ரஜினியின் நெருங்கிய நண்பர் ஆவார். ஆரம்ப காலங்களில் பிரியா, இது நிஜமா ஆகிய தமிழ்ப்படங்களில் அம்பரீஷ் நடித்துள்ளார்.
மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சர், சித்தராமையா அமைச்சரவையில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் என அரசியலில் அம்பரீஷ் பிசியாக இருந்தாலும், கடைசி வரை சினிமாவில் இருந்து ஒதுங்கவில்லை. தமிழில் வெளியான பவர் பாண்டி படத்தின் கன்னட ரீமேக்கில் கடைசியாக அவர் நடித்திருக்கிறார்.
அம்பரீஷ் மரணத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு அருமையான மனிதர், என் உயிர்த் தோழன், உன்னை நான் இன்று இழந்துவிட்டேன்.. உன் ஆன்மா சாந்தியடையட்டும்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.