/tamil-ie/media/media_files/uploads/2020/07/Sudeep-Adopts-4-government-schools-in-Karnataka.jpg)
நடப்பு ஆண்டில் முதல் 5 மாதங்கள் முடிந்துள்ள நிலையில், இந்த ஆண்டு தமிழ் சினிமா பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கிறது. பெரிய நட்சத்திரங்களின் படங்கள் எதிர்பாராத சறுக்கல்களைச் சந்தித்தபோது, மே மாதம் வெளியான 'டூரிஸ்ட் ஃபேமிலி' ஒரு எளிய குடும்ப திரைப்படம் மக்களின் மனதைக் கொள்ளையடித்தது. திரையரங்குகளில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வெற்றி பெற்ற இப்படம், தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் பல மொழிகளில் வெளியாகி மேலும் பல பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது.
சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் முன்னணி கேரக்டர்களில் நடித்திருக்கும் இப்படத்தைப் பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், 'நான் ஈ' புகழ் கன்னட நடிகர் கிச்சா சுதீப் சமீபத்தில் தன் சமூக வலைத்தளப் பக்கத்தில், "சமீப காலங்களில் மிகச் சிறந்த எழுத்து மற்றும் செயல்பாடு. 'டூரிஸ்ட் ஃபேமிலி' நிச்சயமாக ஒரு மைல்கல் கதைசொல்லல். இது என்னை என் இருக்கையிலேயே கட்டிப்போட்டது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதன் சொந்த தருணங்களும் இடமும் உண்டு, மேலும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நடிகர்களால் குறைபாடின்றி சித்தரிக்கப்பட்டுள்ளது. அருமையான நடிகர்கள் தேர்வு. இசை மற்றொரு பெரிய சொத்து" என்று குறிப்பிட்டு, இயக்குனர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தனது முதல் படத்திலேயே பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளார். ஒரு இலங்கை குடும்பம் சட்டவிரோதமாக இந்தியாவில் தஞ்சம் புகுவதைச் சுற்றி இப்படத்தின் கதை நகர்கிறது. ஒரு திடீர் வெடிகுண்டு தாக்குதல் அவர்களை ஆபத்தில் ஆழ்த்தும்போது, அந்தக் குடும்பம் தங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க தங்கள் சுற்றுப்புறங்களுடன் ஒன்றிணைய முயற்சிக்க வேண்டும் என்பதே படத்தின் மையக்கரு. இந்த எளிய கதைக்களம், சுவாரஸ்யமான திருப்பங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் திரைக்கதையாக்கப்பட்டுள்ளது.
One of the finest writing and execution in recent times.#TouristFamily surely is a landmark story telling which kept me glued to my seat. Each character has it's own moments and space,,and every character flawlessly portrayed by actors. Fantabulous casting.
— Kichcha Sudeepa (@KicchaSudeep) June 7, 2025
Music is another…
'டூரிஸ்ட் ஃபேமிலி' சசிகுமாரின் திரைப் பயணத்தில் 'சுந்தரபாண்டியன்' மற்றும் 'குட்டிப்புலி' போன்ற படங்களின் வசூலை மிஞ்சி, அவரது அதிக வசூல் செய்த படமாகப் பதிவாகியுள்ளது. யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. ஷான் ரோல்டனின் இசை, அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு, பாரத் விக்ரமனின் படத்தொகுப்பு என அனைத்தும் படத்திற்குப் பெரிய பலம் சேர்த்துள்ளன.
வெளியான உடனேயே விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற 'டூரிஸ்ட் ஃபேமிலி', பாக்ஸ் ஆபிஸிலும் பெரும் வெற்றியைப் பெற்றது. எஸ்.எஸ்.ராஜமௌலி முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை அனைவரும் இப்படத்தை ரசித்துப் பார்த்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்பப் பின்னணி கொண்ட நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகள், சிறந்த நடிப்பு, சிறப்பான திரைக்கதை என அனைத்தும் இணைந்து 'டூரிஸ்ட் ஃபேமிலி'யை ஒரு மறக்க முடியாத திரைப்பட அனுபவமாக மாற்றியுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.