பெங்களூருவில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இளைஞர் கொலை வழக்கில் பிரபல கன்னட நடிகரான தர்ஷன் கைது செயய்ப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1997-ல் கன்னடத்தில் வெளியான மகாபாரதா என்ற படத்தின் மூலம் அறிமுகமான தர்ஷன், தயாரிப்பாளராக சில படங்களை தயாரித்துள்ள நிலையில், பல படங்களை விநியோகம் செய்துள்ளார். மேலும், 2000-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் தமிழில் வெளியான வல்லரசு படத்தில், போலீஸ் ஆக வேண்டும் என்று முயற்சிக்கும் 4 இளைஞர்களில் ஒருவாராக தர்ஷன் நடித்திருந்தார்.
அதன்பிறகு கன்னட சினிமாவில் ஹீரோவாக பல படங்களில் நடித்திருந்த தர்ஷன் தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான, க்ராந்தி, ராபர்ட், குருஷேத்ரா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வீரம் படத்தை ஒடியா என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்து தர்ஷன் நடித்திருந்தார்.
தற்போது டெவில் தி ஹீரோ என்ற படத்தில் நடித்து வரும் தர்ஷன் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவின் சிததுர்கா பகுதியில் உள்ள ஒரு மெடிக்கல் ஷாப்பில் உதவியாளராக பணியாற்றிய ரேணுகாசுவாமி என்பவர், கொலை செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், பெங்களூருவின், சுமனஹள்ளி என்ற பகுதியில் இறந்து கிடந்துள்ளார். இறந்த ரேணுகா சுவாமி நடிகர் தர்ஷனின் மனைவிக்கு தரக்குறைவாக மெசேஜ் அனுப்பியததாக கூறப்படுகிறது.
இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தியதில், தர்ஷன் சொல்லித்தான், இந்த கொலை சம்பத்தை செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, மைசூருவில் தனது பண்ணை வீட்டில் இருந்த தர்ஷனை பெங்களூர் போலீசார் கைது செய்த நிலையில், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ரேணுகாசுவாமியை காணவில்லை என்று அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது, நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் நேரடியாக கொலையில் ஈடுபட்டாரா அல்லது மறைமுகமாக ஈடுபட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆர்.ஆர்,நகரில் உள்ள தர்ஷனின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், மாண்டியா தொகுதியில் நடிகை சுமலதாவுக்கு ஆதரவாக தர்ஷன் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த குற்றத்தில் நடிகர் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா, இந்த வழக்கில் தர்ஷனின் பெயர் ஏன் வந்தது என்பது விசாரணையில் மட்டுமே தெரியவரும். "கைது செய்யப்பட்ட முதல் சிலர் அவரது பெயரை வெளிப்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவருடைய பங்கு பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர் என கூறியுள்ளார்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், கடந்த ஆண்டு திருமணம் முடிந்து மெடிக்கல் ஷாப்பில் பணிபுரிந்த ரேணுகாசாமி வழக்கம்போல் ஜூன் 8ம் தேதி காலை வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் ரேணுகாசாமி கொலை செய்யப்பட்டு, அவரது உடலை வாய்க்காலில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். “ஜூன் 8 அன்று, மதிய உணவுக்கு வீட்டிற்கு வரும்படி அவரது தாயார் போன்செய்து அழைத்தபோது தனது நண்பர்களுடன் சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார். நேற்று (ஜூன் 10) காவல்துறையினர் வந்து சொன்னபோது தான் அவர் இறந்துவிட்டது தெரியவந்தது என கூறியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“