/indian-express-tamil/media/media_files/2024/11/23/0RJV2W8ZcAinZa0rXxGm.jpg)
தமிழ் சினிமாவில் நடிப்பை பொறுத்தவரை சிவாஜி - எம்.ஜி.ஆர், ரஜினி - கமல், அஜித் -விஜய் என்ற இரு துருவங்களின் பெயர்கள் நிலைத்து நிற்கிறது. அதே போல், பாடலாசிரியர்களை எடுத்துக் கொண்டால் நிச்சயம் கண்ணதாசன் - வாலி என்ற இரு பெயர்களை வரலாறு கூறுகிறது.
இவர்கள் இருவரும் ஏறத்தாழ சமகாலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் இருந்து பாடல்களை எழுத தொடங்கினர். ஒரே காலத்தில் தமிழ் சினிமா உலகில் பயணித்திருந்தாலும் இவர்கள் இருவருக்கும் இடையே பொறாமை இல்லாமல் நல்ல புரிதலும், நட்பும் இருந்தது என்பதற்கு பல்வேறு உதாரணங்களை கூறலாம்.
அந்த வகையில், 'நெஞ்சிருக்கும் வரை' திரைப்படத்தில் கண்ணதாசன் எழுத இருந்த பாடலை, வாலி எழுத வேண்டிய சூழல் உருவான விதம் குறித்து பழைய நேர்காணல் ஒன்றில் வாலி தெரிவித்துள்ளார்.
அதன்படி, "ஸ்ரீதர் திரைப்படங்களில் பாடல்கள் எழுதாத காலத்திலேயே அவருடன் எனக்கு பழக்கம் இருந்தது. 'நெஞ்சிருக்கும் வரை' படத்தின் மூலமாக தான், ஸ்ரீதருக்கு நான் பாடல்கள் எழுத தொடங்கினேன்.
அப்படத்தில், வி. கோபாலகிருஷ்ணன், சிவாஜி கணேசன், முத்துராமன் ஆகியோர் கடற்கரையில் பாடுகிறது போன்ற ஒரு பாடல் இடம்பெற்றிருக்கும். முதலில் இந்தப் பாடலை கண்ணதாசன் எழுதுவதாக இருந்தது.
ஆனால், அந்த சமயத்தில் கண்ணதாசனின் உறவினர் ஒருவர் மறைந்து விட்டதால், அப்பாடலை நான் எழுதி கொடுக்குமாறு என்னிடம் கண்ணதாசன் கேட்டுக் கொண்டார். மேலும், ஸ்ரீதரிடம் பணம் கேட்க வேண்டாம் எனவும், அவரே அதற்கு பணம் கொடுப்பதாகவும் கூறினார்.
அதன் பின்னர், தான் 'நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு' என்ற பாடலை நான் எழுதினேன்" என்று வாலி கூறியுள்ளார். இவ்வாறு தன்னால் ஒரு பாடல் எழுத முடியாத சூழ்நிலை உருவான போது, உடனடியாக அந்த வாய்ப்பை வாலிக்கு வழங்கியயுள்ளார் கண்ணதாசன். இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த புரிதல் மற்றும் சினிமா மீதான பற்று குறித்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.