kannadasan | Tamil Cinema: காலத்தால் அழியாத பாடல்களைத் தந்தவர் கவியரசு கண்ணதாசன். 1927ம் ஆண்டில் இம்மண்ணில் அடியெடுத்து வைத்த அவர் 1981ம் ஆண்டில் காலமானார். அவர் இம்மண்ணை விட்டு மறைந்தாலும், ரசிகர்களின் நீங்க இடம் பிடித்துள்ளார்.
காரைக்குடி சிறுகூடல்பட்டி தந்த முத்தையா எனும் கண்ணதாசன் பிறப்பு முதல் இறப்பு வரை இடைப்பட்ட காலத்தில் அத்தனைக்குமாய் முத்து முத்தாய் பாடல் படைத்தவர். கம்பனையும் பாரதியையும் மானசீக குருவாய்க் கொண்டு இவர் வடித்த கவிதைகளைப் படிக்கையிலே குட்டையாய்க் குழம்பிய மனம் கூட தெளிந்த நீரோடையாய் மாறி விடும்.
கொஞ்சம் களைப்பாக இருந்தாலும் போதும், காதுகளுக்குள் தேனாய்ப் பாய்ந்து நெஞ்சமெல்லாம் இனிக்கச் செய்யும் அவரது வரிகள். அன்பு, பாசம், மகிழ்ச்சி, கோபம், ஆசை, துக்கம் என மனித உணர்ச்சிகள் அனைத்திற்கும் பாடல் தர முடியுமென்றால் அது கண்ணதாசனால் மட்டுமே சாத்தியம்.
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து, வற்றாத கற்பனைக்கு சொந்தக்காரரான கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கேற்பவே அவர் என்றென்றும் நிரந்தரமானவராக வாழ்கிறார்.
இந்நிலையில், கண்ணதாசன் அழுத ஒரே தருணத்தை அவரது மகள் கலைச்செல்வி கண்ணதாசன் தனது மறக்க முடியாத நினைவுகளாக வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ஒரு யூடியூப் சேனல்களுக்கு அவர் அளித்த பேட்டியில் பேசியது பின்வருமாறு:
அப்பாவோட நினைவுகள் நிறைய இருக்கு. மறக்க முடியாதது, நான் சின்ன குழந்தையாக இருந்த போது நடந்தது. அது இன்றைக்கும் என்னால மறக்க முடியல. அப்பா ஒரு முறை சிங்கப்பூர் போனாங்க. திடீர்ன்னு ஒருநாள் ராத்திரி 1:30 மணிக்கு போன் பண்ணி அம்மா ஒரே அழுகையாக அழுதார்.
அப்பா அம்மாட்ட, 'என் பொண்ணு இறந்தா மாறி கனவு கண்டேன். உடனே எழுப்பி என்னுடன் பேச சொல்லு' என்றார். அம்மா அப்பாகிட்ட 'ஒன்னும் இல்ல நல்லாத்தான் தூங்கிட்டு இருக்கா-ன்னு' சொன்னாங்களாம். நான் தூக்கத்தில் இருந்து எழுந்து அப்பாட்ட பேசியிருக்கேன்.
அப்பா என்னுடன் பேசுனத்துக்கு அப்பறம் தான் தூங்க போனார்களாம். ஆனால் அதெல்லாம் எனக்கு இப்ப ஞாபகம் இல்ல. 14 பிள்ளைகளை பெற்று ஒவ்வொரு குழந்தைகள் மேலும் அவருக்கு எவ்வளவு ஈர்ப்பு இருந்துள்ளது பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“