கண்ணதாசன் ஒரு நாள் முழுவதும் பாடல் எழுத திணறி, இயக்குனர் சலிப்புடன் கூறிய வார்த்தையை வைத்தே எழுதி, சூப்பர் ஹிட்டான பாடல் பிறந்த கதையை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல பாடல்களை கொடுத்தவர் கண்ணதாசன். க்ளாசிக் சினிமாவின் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர் – சிவாஜி படங்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். காலங்கள் பல கடந்தாலும் கண்ணதாசன் எழுதிய பல பாடல்கள் இன்றைய ரசிகர்கள் ரசிக்கும்படி உள்ளது. இப்படிப்பட்ட கண்ணதாசன் எழுத திணறி, சூப்பர் ஹிட்டான பாடல் குறித்து யூடியூபர் துரை சரவணன் தனது யூடியூப் சேனல் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அந்த வீடியோவில், நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம் திருவிளையாடல். கே.வி மகாதேவன் இசையில் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெரிய வரவேற்பை பெற்றன. இந்தப் பாடல்கள் அனைத்தையும் கவியரசு கண்ணதாசன் எழுதியிருப்பார்.
Advertisment
Advertisements
குறிப்பாக ஒரு நாள் போதுமா பாடல் இன்றும் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. அப்படியான இந்தப் பாடல் பிறந்தது சுவாரஸ்யமான கதை. இயக்குனர் ஏ.பி.நாகராஜன் இந்த பாடலை எழுத கண்ணதாசனை தனது அலுவலகத்திற்கு காலையில் வரவழைத்தார். பாடல் இடம்பெறும் கதைக்களத்தை கண்ணதாசனிடம் விளக்கி கூறுகிறார். யாராலும் வெல்ல முடியாத, ஆணவம் பிடித்த, இறைவனுக்கே சவால் விடுகிற பாடகன் பாடும் பாடல் என்று கூறி கண்ணதாசனை பாடல் எழுதக் கேட்கிறார்.
கண்ணதாசன் காலை முதல் மாலை வரை யோசித்தாலும், சரியான பல்லவி கிடைக்கவில்லை. பொறுத்து பார்த்த இயக்குனர் அங்கலாய்ப்புடன் கண்ணதாசனிடம் இன்று ஒரு நாள் போய்விட்டது, நீங்கள் பாட்டு எழுத ஒரு நாள் போதுமா, இல்லை இன்னொரு நாள் வேண்டுமா என்று கேட்டிருக்கிறார். உடனே கண்ணதாசன் இயக்குனர் சொன்ன வார்த்தைகளை வைத்தே ஒரு நாள் போதுமா பாடலை எழுதி முடித்தார்.
பாடல் தயாரானதும், இதற்கு எதிர் பாடலை டி.எம்.சௌந்தரராஜன் பாட உள்ளதால், இந்த பாடலை பாட அன்றைய காலக் கட்டத்தில் சிறந்த விளங்கிய சீர்காழி கோவிந்தராஜனிடம் கேட்கிறார்கள். பாடலை கேட்டு பாட ஒத்துக் கொண்டவர், முழு கதையைக் கேட்டப் பிறகு பாட மறுத்துவிட்டார். கதைப்படி, தோற்றுப்போகக்கூடிய பாடலை தன்னால் பாட முடியாது என சீர்காழி கோவிந்தராஜன் மறுத்துவிட்டார். அதன் பிறகு பாலமுரளி கிருஷ்ணா இந்தப் பாடலை பாடினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“