வாலி என்ற பெயருக்கு ஏற்ற குணம் உனக்கு என்றைக்கும் இருக்கும் என கவிஞர் வாலியிடம் கவியரசு கண்ணதாசன் கூறிய சுவாரஸ்ய நிகழ்வை இப்போது பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. கண்ணதாசனுக்குப் பிறகு தனது தனித்துவமான கவிதை திறமையால் தமிழ் சினிமாவில் கோலோச்சியவர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படியான பாடல்களை எழுதக் கூடியவர் வாலி. மேலும், அப்போதைய ட்ரெண்டிற்கு ஏற்றாற்போலும் பாடல் எழுதி மகிழ்வித்தவர் வாலி.
இந்தநிலையில், வாலி ஒரு நிகழ்ச்சியில் கண்ணதாசனிடம் தனது சிலேடை பேச்சு மூலம் பாராட்டு வாங்கிய நிகழ்வு குறித்து பேசியிருப்பார்.
வாலி கூறுகையில்; ஒருமுறை தேவக்கோட்டையில் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற படம் எடுத்த சேவுகன் செட்டியாரின் வீட்டில் தங்கியிருந்தேன். கந்த சஷ்டி விழாவில் கவியரங்கத்திற்கு தலைமையேற்பதற்காக அங்கு தங்கியிருந்தேன்.
சாயந்திரம் ஒரு பட்டிமன்றத்திற்கு பிறகு கவியரங்கம் நடைபெறுவதாக இருந்தது. கண்ணகி மேலா? மாதவி மேலா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. அப்போது சேவுகன் செட்டியாரின் வீட்டு வாசலில், சேர் போட்டு நானும் கவிஞர் கண்ணதாசனும் உட்கார்ந்து பட்டிமன்றத்தைக் கேட்டு வந்தோம்.
அப்போது கண்ணகி மேலா? மாதவி மேலா? என்ற தலைப்பில் நடைபெறும் பட்டிமன்றத்திற்கு நீ நடுவராக இருந்தால் என்ன தீர்ப்பு வழங்குவே என கண்ணதாசன் என்னிடம் கேட்டார். அதற்கு நான் இரண்டு பேரும் மேல் (Male) இல்லை, இரண்டு பேரும் ஃபீமேல் (Female) எனத் தீர்ப்பு வழங்குவேன் என்று கூறினேன். அப்போது கவிஞர் கண்ணதாசன் என்னிடம், இந்த வாலி என்கிற பெயருக்கு இருக்கிற குரங்கு புத்தி எப்போது உன்னிடம் இருக்க வேண்டும் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“