கவிஞர் கண்ணதாசன் உட்கார்ந்த இடத்திலே இருந்து எழுதிய ஐயப்பன் பாடலுக்கு சம்பளம் வாங்கவில்லை என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
Advertisment
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர பாடலாசிரியர்களில் ஒருவரான கவிஞர் கண்ணதாசன் சம்பளம் வாங்காமல் ஐயப்பன் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். சோஷியல் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனலில் சித்ரா லட்சுமணனுக்கு பாடகர் வீரமணி ராஜூ அளித்த பேட்டியில் இந்தத் தகவலை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
ஒருமுறை எனது சித்தப்பா வீரமணி பாடலுக்கான இசையை ஒலிப்பதிவு செய்து கேசட்டாக கண்ணதாசனிடம் கொடுத்து பாடல் எழுதச் சொன்னார். அடுத்த நாள் பாடலுக்கான ரெக்கார்டிங் ஆரம்பமாகிவிட்டது. சித்தப்பா என்னை கவிஞர் வீட்டுக்குச் சென்று பாடலை வாங்கி வரச் சொன்னார். நான் கவிஞர் வீட்டுக்கு சென்று அவரிடம் கேட்டப்போது, கேசட் கொடுத்தார்கள், எங்கேயோ வச்சுட்டேன் என சொன்னார்.
பின்னர் உடனே என்னிடம் நீ பாடுவியா, உனக்கு அந்த பாடலின் மெட்டு தெரியுமா எனக் கேட்டார். நான் தெரியும், பாடுவேன் என்றேன். உடனே ஒரு சேரில் அமர்ந்து என்னை பாடச் சொன்னார். எனக்கு பயமாக இருந்தது. இருந்தாலும் அந்த பாடலின் மெட்டைப் பாடினேன். பல்லவி முடிந்ததும், சரணத்தையும் பாடச் சொன்னார். பாடி முடித்ததும் எழுதிக்கோ என பாடல் வரிகளைக் கூற ஆரம்பித்தார். என்னிடம் பேப்பர் எதுவும் இல்லை.
Advertisment
Advertisement
உடனே பேப்பர் கொடுத்து ’மார்கழி மாதம் ஊர்வலம் போகும் ஐயப்பா’ என்ற பல்லவியை எழுதச் சொன்னார். எனக்கு சுருக்கெழுத்து தெரியும் என்பதால், சுருக்கெழுத்தில் எழுதினேன். உடனே இதை சரியா வீரமணியிடம் விளக்கியிருவியா எனக் கேட்டு, சரணத்தையும் சொன்னார். எல்லாம் எழுதி முடித்தவுடன் அவ்வளவு தான் பாடல் முடிந்தது என்றார்.
உடனே எனக்கு என்னுடைய சித்தப்பா கவிஞருக்கு சம்பளமாக 1500 ரூபாய் கொடுத்துவிட்ட கவர் ஞாபகம் வந்தது. அதைக் கொடுத்தேன், வாங்க மறுத்த கண்ணதாசன், வீரமணி என்ன பெரிய ஆளா, அவனிடமே கொண்டு போய் கொடுத்துடு என்றார்.
நான் திரும்பி வந்து சித்தப்பாவிடம் நடந்ததைக் கூறினேன். இரவு 7 மணிக்கு கவிஞர் வந்தார். அப்போது நான் பாடியதை பாராட்டினார். பின்னர் என் சித்தப்பா கவர் கொடுக்க, அதை வாங்கி என்னிடம் கொடுத்து இது உனக்கு என்றார். இப்படியாக அந்தப் பாடலுக்கு கவிஞர் சம்பளமே வாங்கவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“