மருதமலை மாமணியே பாடலில் அந்த ஒரு வரி... கண் கலங்கிய தயாரிப்பாளர்; கவிஞருக்கு அள்ளிக் கொடுத்த பணம்!

'மருதமலை மாமணியே முருகையா' பாடலை கேட்ட தயாரிப்பாளர் சின்னப்பா தேவர், கவிஞர் கண்ணதாசனுக்கு பெரும் தொகையை சன்மானமாக வழங்கியதாக கண்ணதாசனின் மகனும், இயக்குநருமான கண்மணி சுப்பு தெரிவித்துள்ளார்.

'மருதமலை மாமணியே முருகையா' பாடலை கேட்ட தயாரிப்பாளர் சின்னப்பா தேவர், கவிஞர் கண்ணதாசனுக்கு பெரும் தொகையை சன்மானமாக வழங்கியதாக கண்ணதாசனின் மகனும், இயக்குநருமான கண்மணி சுப்பு தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
kannadasan Asmj

கவிஞர் கண்ணதாசனின் 'மருதமலை மாமணியே முருகையா' பாடலை கேட்ட சின்னப்பா தேவர் அவருக்கு பெரும் தொகையை வழங்கி கௌரவித்ததாக, கண்ணதாசனின் மகன் கண்மணி சுப்பு தெரிவித்துள்ளார். டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் சினிமா ஊடகவியலாளர் சித்ரா லட்சுமணன் உடனான நேர்காணலின் போது இந்த தகவலை அவர் நினைவு கூர்ந்தார்.

Advertisment

கண்ணதாசனுக்கும், சின்னப்பா தேவருக்கும் இடையே இருந்த நட்பு குறித்து பலருக்கு தெரியும். இதற்கு உதாரணமாக பல சம்பவங்களை ஏராளமானோர் பதிவு செய்துள்ளனர். அந்த வகையில், 'மருதமலை மாமணியே முருகையா' பாடல் உருவான தருணத்தை கண்ணதாசனின் மகனும், இயக்குநருமான கண்மணி சுப்பு பகிர்ந்து கொண்டார்.

அதன்படி, "என் தந்தை கண்ணதாசனுக்கு நிதி நெருக்கடியான காலத்தில் பணம் கொடுத்து உதவி செய்வதற்கு சில நண்பர்கள் இருந்தனர். அவர்களை நண்பர்கள் என்று கூறுவதை விட புரவலர்கள் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். இவர்கள் குறித்த கூடுதல் தகவல்கள் கிடைத்தால், ஒரு புத்தகமே எழுதலாம். அந்த அளவிற்கு கண்ணதாசனின் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்தனர்.

சினிமாவை பொறுத்தவரை, தயாரிப்பாளர் சின்னப்பா தேவரும் மிகச் சிறந்த புரவலர் என்று கூறலாம். சில சமயங்களில் நிர்பந்தத்தின் காரணமாக வேறு சில பாடலாசிரியர்கள் அவரது தயாரிப்பில் வெளியான படத்தில் பாடல்கள் எழுதி இருக்கின்றனர். இவ்வாறு பாடல்கள் எழுதாத படத்திற்கும் என் தந்தைக்கு பணம் வழங்கும் ஒரு வழக்கத்தை சின்னப்பா தேவர் கடைபிடித்தார். இதனை என் தந்தையே கூறி இருக்கிறார்.

Advertisment
Advertisements

குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் 'தெய்வம்' திரைப்படத்திற்கு என் தந்தை கண்ணதாசன் பாடல்கள் எழுதினார். அப்போது, அவருக்கு உதவியாக நான் இருந்தேன். அப்படத்தில், 'மருதமலை மாமணியே முருகையா' பாடல் எழுதப்பட்டது. குறிப்பாக, 'தேவரின் குலம் காக்கும் வேலைய்யா' என்ற வரிகளை என் தந்தை எழுதிய போது, சின்னப்பா தேவர் கண் கலங்கி விட்டார். இதைத் தொடர்ந்து, இப்பாடலுக்கு சன்மானம் தான் வழங்க வேண்டும் என்று கூறி பெரிய தொகையை என் தந்தைக்கு வழங்கி சின்னப்பா தேவர் கௌரவித்தார்" என்று கண்ணதாசனின் மகன் கண்மணி சுப்பு தெரிவித்துள்ளார்.

Kannadasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: