எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கதாநாயகியாக ஜெயலலிதாவை தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் கொண்டு வந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.
சினிமா விமர்சகர் துரை சரவணன், கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் எழுதிய சூழ்நிலைகள் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சரோஜாதேவியை எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கதாநாயகி அந்தஸ்தில் இருந்து சின்னப்பா தேவர் நீக்க செய்த முயற்சிகளையும், கண்ணதாசன் அதற்கு உதவியதையும் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: இந்த துயரத்திலும் ஏழைகளுக்கு உதவி: சினிமா உலகை நெகிழ வைத்த மனோபாலா மனைவி
அந்த வீடியோவில், ஒரு காலத்தில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கதாநாயகியாக இருந்தவர் சரோஜாதேவி. எம்.ஜி.ஆர்- சரோஜாதேவி ஜோடி புகழ்பெற காரணமாக இருந்தவர் தயாரிப்பாளர் சின்னப்பா தேவர். சரோஜாதேவி பெரிய வெளிச்சத்திற்கு வந்தப் பிறகு, அவரின் தாயார் ருத்ரம்மா தயாரிப்பாளர்களிடம் கறாராக நடந்துக் கொள்கிறார். இது திரைத்துறையில் புகைச்சலாக இருந்து வந்தது.
அப்படியான சமயத்தில் சின்னப்பா தேவர் வேட்டைக்காரன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்க சரோஜாதேவியின் கால்ஷீட் கேட்கிறார். மேலும், எம்.ஜி.ஆர் இந்த தேதியில் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார், அந்த தேதியில் வந்து நடித்துக் கொடுங்கள் என பழைய பழக்கத்தில் கேட்கிறார். அதற்கு ருத்ரம்மா தேதிகளை எங்களிடம் கேட்டு முடிவுச் செய்ய வேண்டும் என கறாராக கூறுகிறார். மேலும், 4 மொழிகளில் சரோஜாதேவி முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். சிவாஜி கால்ஷீட் கேட்டே கொடுக்க முடியல. மேலும், கலர் படம் எடுக்கும் பெரிய தயாரிப்பாளர்கள் எல்லாம் சரோஜாதேவியின் கால்ஷீட்க்கு கேட்கிறார்கள் எங்களால் கொடுக்க முடியல, நீங்க ப்ளாக் அண்ட் ஒயிட் படம் தானே எடுக்குறீங்க என்பது போல் ருத்ரம்மா கூறுகிறார்.
இதனைக் கேட்டு கோபமடைந்த சின்னப்பா தேவர் உங்க பொண்ணு நடிப்பாங்களா இல்லையா என கேட்க, அதற்கு ருத்ரம்மா இந்த படத்தில் நடிக்க முடியாது. அடுத்தப் படத்தில் பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார். அப்போது சின்னப்பா தேவர் என் படத்தில் யார் நடிக்க வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன். இனிமேல் என்னுடைய எந்தப் படத்திலும் உங்க பொண்ணு நடிக்காது என்று கோபமாக கூறிவிட்டு கிளம்பிவிடுகிறார். அப்போது சரோஜாதேவி ஓடி வந்து சமாதானம் செய்கிறார். ஆனால் சின்னப்பா தேவர் கோபமாக கிளம்பிவிட்டார்.
அடுத்ததாக சின்னப்பா தேவர் நடிகை சாவித்திரியிடம் சென்று கால்ஷீட் கேட்டு வேட்டைக்காரன் படத்தில் நடிக்க வைத்தார். ஆனால் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கதாநாயகி இல்லை என்ற பேச்சு எழுந்தது. இதனை சரி செய்ய சின்னப்பா தேவர், எம்.ஜி.ஆரை சந்தித்து பேச, ஆயிரத்தில் ஒருவன் பட சூட்டிங் நடக்கும் இடத்திற்கு செல்கிறார். அந்தப் படத்தில் தான் ஜெயலலிதா முதன்முறையாக எம்.ஜி.ஆருக்கு ஜோடியாகிறார். அப்போது நாணமோ, நாணமோ பாடல் சூட்டிங் நடந்தது. அதில் ஜெயலலிதா நடிக்க சிரமப்பட்டது போல் தெரிந்து, இயக்குனர், சின்னப்பா தேவர் எல்லோரும் அவரை தேற்றி நடிக்க வைக்கிறார்கள். ஆனால் பின்னர் காட்சியை மீண்டும் போட்டு பார்த்தபோது தான் ஜெயலலிதா, கவிஞர் கண்ணதாசன் வரிகளுக்கு ஏற்ப சிறப்பாக நடித்தது தெரியவந்தது.
அந்த நொடியே, ஜெயலலிதா தான் எம்.ஜி.ஆருக்கு பொருத்தமான ஜோடி என கன்னிதாய் படத்தில் நடிக்க வைக்கிறார் சின்னப்பா தேவர். அடுத்ததாக எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கதாநாயகி இமேஜை உடைக்க, அடுத்ததடுத்த படங்களில் இருவரையும் சேர்ந்து நடிக்க வைக்கிறார். அப்படி அடுத்ததாக முகராசி படத்தில் ஒரு பாடலை எழுத தனது நெருங்கிய நண்பர் கண்ணதாசனை அழைக்கிறார். அவரிடம் தனக்கு சரோஜாதேவி வீட்டில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைக் கூறி, ஜெயலலிதா ஆஸ்தான கதாநாயகி அந்தஸ்துக்கு உயர்த்த, அவரை வர்ணித்து சிறப்பான பாடல்களை எழுதித் தர கேட்கிறார். அதற்கேற்ப கண்ணதாசனும் எழுதிக் கொடுக்கிறார்.
அடுத்ததாக படத்தில் கடைசி பாடலை எழுதித் தரச் சொல்லிக் கேட்கும்போது, இனிமேல் எம்.ஜி.ஆருக்கு ஆஸ்தான கதாநாயகி ஜெயலலிதா தான் என்பது மக்கள் மனதில் பதிய வைக்கும் வகையிலும், சரோஜாதேவிக்கும், அவரது அம்மா ருத்ரம்மாவுக்கும் கோபம் வரும் வகையில் பாடல் எழுதச் சொல்லிக் கேட்கிறார். அதற்கு ஏற்ப கண்ணதாசனும் சரோஜாதேவியை மறைமுகமாக கிண்டல் செய்து ‘உனக்கும் எனக்கும் தான் பொருத்தம்’ பாடலை எழுதிக் கொடுக்கிறார். பின்னர் இந்த ஜோடி திரைத்துறையிலும், அரசியலிலும் ஜொலித்தது அனைவருக்கும் தெரிந்ததே.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil