சினிமாவில் சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நடிக்க வந்த பத்மினிக்கு கண்ணாதாசன் எழுதிய ஹிட் பாடலுக்கு பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான சம்பவத்தை இப்போது பார்ப்போம்.
இதுகுறித்து துரை சரவணன் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகைகளில் ஒருவர் பத்மினி. நடிப்பு மற்றும் நடனத்தில் சிறந்த விளங்கிய விரல் விட்டு எண்ணக் கூடிய நடிகை பத்மினி. சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த பத்மினி அமெரிக்காவில் வசிக்கும் டாக்டரை திருமணம் செய்துக் கொண்டு, அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
இந்தநிலையில் தமிழ் சினிமாவில் பத்மினிக்கான இடம் காலியாக இருந்தது. அந்த இடத்திற்கு பொருந்தக் கூடியவராக அந்தக் காலத்தில் இருந்தவர் சரோஜா தேவி மட்டுமே. இவரும் நடிப்பு மற்றும் நடனத்தில் அசத்துபவர். ஆனால் திடீரென புகழ் வெளிச்சம் ஏறியதால், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களை மதிக்காமல் சற்று ஆணவத்துடன் நடந்துக் கொண்டார்.
இந்தநிலையில் நடிகை பத்மினியை மீண்டும் கொண்டு வர முயற்சிகள் நடந்தன. அந்த முயற்சியின் வெற்றியாக பத்மினி மார்டன் தியேட்டர்ஸின் காட்டு ராஜா படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க தொடங்கினார். இந்தப் படத்தில் நடிகை பத்மினிக்கு அறிமுக பாடல் இருந்தது. இந்த பாடலை எழுத கவிஞர் கண்ணதாசனை அணுகினார் இயக்குனர் சுப்பாராவ்.
அப்போது பாடல், பத்மினியின் மறு வருகையை குறிப்பதோடு, அந்தநேரத்தில் ஆணவத்துடன் இருந்த புதுமுக நடிகை சரோஜா தேவிக்கு சவால் விடுவதாக, இருக்க வேண்டும் என்று கவிஞரிடம் இயக்குனர் கூறினார். கண்ணதாசனுக்கும் அப்போது நடந்தவை எல்லாம் தெரியும் என்பதால், அதற்கு ஏற்றாற்போல் பாடல் எழுதினார். இந்தப் பாடல் இயற்கையை வருணிப்பது போல் இருக்கும், அதேநேரம் சரோஜா தேவிக்கு சவால் விடுவதாகவும் இருக்கும்.
அந்தப் பாடல், ”ஏனடி ரோஜா… என்னடி சிரிப்பு… எதனைக் கண்டாயோ, அன்று போனவள் மீண்டும் வந்து விட்டால் என்று புன்னகை செய்தாயோ…”
இந்தப் பாடலில் பத்மினி திருமணம் செய்தபின் கணவரோடு நடிக்க வந்ததையும் கண்ணதாசன் அழகாக குறிப்பிட்டு இருப்பார். ”மொட்டாக நின்றவளே, முள்ளோடு வந்தவளே, முத்து நகைகளை கொட்டி அளந்திடும் முகத்தைக் கொண்டவளே” என்று கண்ணதாசன் எழுதியிருப்பார்.
இரண்டாவது சரணத்தில் சரோஜா தேவிக்கு சவால் விடும் வகையில் வரிகள் இருக்கும். “ரத்தினக் கம்பளமே, அடி முத்திரி மோதிரமே, நீ நாளை பொழுதிற்குள் வாடி விழுந்திடும் மாய கதையடியோ, நான் சித்திர பெண்மையடி, இது தெய்வ பருவமடி, எத்தனை காலங்கள் மாறியபோதும், என்றும் இளமையடி” என்று கண்ணதாசன் எழுதியிருப்பார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.