/indian-express-tamil/media/media_files/2025/09/03/screenshot-2025-09-03-222238-2025-09-03-22-22-57.jpg)
சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் கண்ணதாசன். இவரது இயற்பெயர் முத்தையா. அப்பா பெயர் சாத்தப்ப செட்டியார். அம்மா பெயர் விசாலாட்சி. உடன் பிறந்தவர்கள், ஆறு சகோதரிகள், மூன்று சகோதரர்கள்.
செட்டிநாட்டில், நிறைய குழந்தைகளைப் பெற்ற தம்பதி, குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு பிள்ளையை சுவீகாரம் கொடுக்கும் நடைமுறையாக இருக்கிறது. கண்ணதாசனும் அவ்விதம் காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார்-சிகப்பி ஆச்சி தம்பதிக்கு சுவீகாரம் தரப்பட்டார். சுவீகாரம் சென்ற வீட்டில் அவருக்கு வைக்கப்பட்ட பெயர் நாராயணன். கண்ணதாசன் எட்டாம் வகுப்பு வரை தான் படித்துள்ளார்.
சிறு வயதிலேயே எழுத்தின் மீது தீராத ஆர்வம். சிறு சிறு புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்தன. பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்பது அவரது கனவு. 16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு கிளம்பி வந்தார் கண்ணதாசன். சந்திரசேகரன் என்று புனைப் பெயர் சூடிக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார். ஆனால், சென்னை அவருக்கு பல கொடுமையான அனுபவங்களைத் தந்தது.
ஒரு நிறுவனத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார். கவிதைகள் மூலம் அடையாளம் கிடைத்த பிறகு, திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு ஏற்பட்டது. சண்டமாருதம் பத்திரிகை நிறுத்தப்பட்ட பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும் சேர்க்கப்பட்டார். கதை இலாகா சந்திப்புகளில் கருணாநிதியின் நட்பு கிட்டியது. அதன் வழி திராவிட இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகமானது.
கண்ணதாசனுக்கு மூன்று மனைவியர், 15 பிள்ளைகள். கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை. இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள்.
அவரை பற்றி பேச்சாளர் வாசுகி மனோகரன் ஒரு மேடையில் பேசுகையில், "கண்ணதாசன் அவர்களுக்கு மட்டும் தான் ஒரு பாடல் வரியை இரண்டு அர்த்தங்களோடு எழுத முடியும். எடுத்துக்காட்டாக, 'பாட்டு பாடவா....பார்த்து பேசவா...' என்ற பாடலுக்கு நா உனக்கு பாட்டு பாடவா என்று ஒரு அர்த்தமும், என்னுடன் சேர்த்து பாட்டு பாட வா என்று மற்றொரு அர்த்தமும் உள்ளது. இப்படி எழுதுவதற்கு அவரால் மட்டுமே முடியும்." என்று அந்த மேடை பேச்சி கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.