தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு நாயகனாக நடித்த ‘கண்ணப்பா’ திரைப்படம் கடந்த ஜூன் 27-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கண்ணப்பா திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் எனப் ‘பான் இந்தியா’ திரைப்படமாக தயாரிக்கப்பட்டது.
கண்ணப்பா திரைப்படம் சிவ பக்தரின் கதை என்பதால் வணிக ரீதியாக வெற்றி படமாக உருவாக்க, இந்திய அளவில் பிரபலமான நடிகர்கள் பிரபாஸ், மோகன் லால், அக்ஷய் குமார், சரத் குமார், நடிகை காஜல் அகர்வால், நடிகை ப்ரீத்தி முந்தன், நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம், மோகன் பாபு என மெகா ஸ்டார்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
டோலிவுட், கோலிவுட், மோலிவுட், பாலிவுட் என எல்லா மொழி சினிமாவிலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கண்ணப்பா திரைப்படம் பெரும் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த படக்குழுவினருக்கு ரசிகர்களிடமிருந்து வந்த எதிர்மறையான விமர்சனங்கள் ஏமாற்றம் அடையச் செய்தது. அதுமட்டுமல்ல, ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவான கண்ணப்பா திரைப்படம் வணிக ரீதியாக வெறும் ரூ. 40 கோடி மட்டும் வசூலித்து படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில், கண்ணப்பா திரைப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வியாழக்கிழமை (04.09.2025) தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் வெளியாகியுள்ளது.
சரத்குமார், மோகன் லால், பிரபாஸ் என மெகா ஸ்டார்களை நடிக்க வைத்து ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு திரையரங்குகளில் படுதோல்வி அடைந்த கண்ணப்பா திரைப்படம் ஒ.டி.டி-யில் வெளியாகி உள்ளது. ஒ.டி.டி-யில் ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.