இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் சாதி வன்முறையின் கோர முகத்தை கர்ணன் திரைப்படத்தில் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்குனர் ராம் இடம் உதவி இயக்குனராக இருகும்போதே அவர் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியுள்ளார். அந்த தொகுப்பில் தாமிரபரணி படுகொலை பற்றி ஒரு கதை எழுதியிருப்பார். அதே போல, பிரபல வார இதழான ஆனந்த விகடனில் மறக்கவே நினைக்கிறேன் உள்ளிட்ட தொடர்களையும் எழுதியுள்ளார். இந்த சூழலில்தான் இயக்குனர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனரானார். பா.ரஞ்சித் தயாரிப்பில் பலரும் எதிர்பார்த்தது போலவே, பரியேறும் பெருமாள் திரைப்படம் சாதிய பாகுபாடுகள் குறித்து பேசியது.
பரியேறும் பெருமாளைத் தொடர்ந்து, இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் தாணு தயாரிப்பில் கர்ணன் திரைப்படத்தை இயக்கி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பையும் சில அரசியல் விவாதங்களையும் எழுப்பியுள்ளது.
கர்ணன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இந்த படம் தாமிர பரணி படுகொலை மற்றும் கொடியன்குளம் வன்முறை பற்றியது என்று பேசப்பட்டது. அதே போல, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பொடியன்குளம் வன்முறை கொடியன்குளம் வன்முறையையே நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
இந்த கொடியன்குளம் வன்முறை 1995ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின்போது நடந்த சம்பவத்தை 1998-ல் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நடந்ததைப்போல் மாற்றிக்காட்டலாமா? திரைப்படத்தில் வரலாற்றை தவறாக திரிக்கலாமா? என்று இயக்குனர் மாரி செல்வராஜ்ஜை நோக்கி கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர். சமூக ஊடகங்களில், இணையத்தில் இப்படியான, கேள்விகளை எழுப்புபவர்கள் பெரும்பாலும் திமுக ஆதரவாளர்களாக உள்ளனர்.
அது ஜெயலலிதா ஆட்சியாக இருந்தாலும் கருணாநிதி ஆட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகள் எல்லா காலங்களிலும் நடந்து வருகிறது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முதுகுளத்தூர் கலவரம் என்றால், கூலி உயர்வு கேட்டதற்காக ஆதிக்க சாதியினரால் 44 பேர் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட கீழ் வெண்மணி படுகொலை 1968ல் திமுக ஆட்சியில்தான் நடைபெற்றது. அதற்குப் பிறகு, விழுப்புரம் கலவரம் 1978, கொடியன்குளம் வன்முறை - 1995, மேலவளவு படுகொலை, தாமிரபரணி படுகொலை - 1999, தருமபுரி நாயக்கன் கொட்டாய், நத்தம் காலனி, அண்ணாநகர் வன்முறைகள் - 2012 என எல்லா ஆட்சிக் காலத்திலும் சாதிய வன்முறைகள் நடந்துள்ளது. எல்லாவாற்றிலும் அரசுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை முழுமையாக அளித்துவிடவில்லை என்பதுதன் நிதர்சனம். அதனால்தான், அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களில் அவை ஆறாவடுவாக நிலைத்துள்ளன.
இந்த சூழலில்தான் கர்ணன் திரைப்படம் கொடியன்குளம் வன்முறையை சுட்டும் விதமாக பொடியன்குளம் வன்முறையைக் காட்டியுள்ளதாகவும ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடந்ததை கருணாநிதி ஆட்சி காலத்தில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளதாக விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
தமிழகத்தில் தலித் எழுச்சி அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பிறகுதான் எழுந்தது என்று கூறுவது தவறானது. நீரு பூத்த நெறுப்பாக இருந்த தலித்துகளின் எதிர்ப்புக் குரல் போராட்ட உணர்வு 90களில் அம்பேத்கர் நூற்றாண்டு காலத்தில் வேகமடைந்தது என்று கூறலாம். கலை, பண்பாடு, கருத்தியல் ரீதியாக ஒரு அலை உருவானது. அதே காலகட்டத்தில் தலித்துகள் தாங்கள் வாழும் ஊரில் பொது சாலை, பொது இடத்தில் தண்ணீர் எடுத்தல், பொது ஏலம், கல்வி உரிமை, பொது போக்குவரத்து போன்ற பொது உரிமைகளை கோரினார்கள். மறுக்கப்பட்ட இடங்களில் போராட்டங்களை நடத்தினார்கள். அதனால், ஆதிக்க சாதியினருக்கும் சாதியால் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கும் வன்முறைகள் நடந்துள்ளது. இந்த வன்முறைகள் அதன் பாரிய இழப்புகள் ஒப்பீட்டளவில் வட மாவட்டங்களைவிட தென் மாவட்டங்களில் அதிகம்.
இயக்குனர் மாரி செல்வராஜ், கொடியன்குளம் வன்முறையை உண்மையில் திட்டமிட்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடந்ததை கருணாநிதி ஆட்சி காலத்தில் நடந்ததாக சித்தரித்துள்ளாரா என்றால் இல்லை. ஒரு திரைப்படத்தில் பல சம்பவங்களை இரண்டரை மணி நேரத்துக்குள் கொண்டுவரும்போது அது ஒரே காலகட்டத்தில் வருவது போல, தோற்றம் அளிக்கும். இயக்குனர் மாரி செல்வராஜின் நோக்கம், சாதிய வன்முறைகளால் தலித்துகள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் காட்டுவதுதான்.
கர்ணன் திரைப்படத்தை தாண்டி, கொடியன்குளம் வன்முறை நடந்த காலத்தில் உண்மை அறியும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான அ.மார்க்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் அ.மார்க்ஸ் தனது ஃபேஸ் புக் பக்கத்தில் குறிப்பிடுகையில், “கொடியன்குளம் பிரச்சினை என்ன சார்?
இன்று காலை முதல் இரண்டு காட்சி ஊடக இளைஞர்கள் என்னிடம் இது பற்றிப் பேச வேண்டும் எனக் கேட்டனர்.
கால் நூற்றாண்டுக்கு முன் நடந்த ஒரு கொடும் சாதிய வன்முறை. எனக்கு துல்லியமான விவரங்கள் ஊடகத்தில் பேசும் அளவிற்கு உடனடியாக நினைவில்லை என்றேன். நீங்கள் அப்போது அறிக்கை எல்லாம் வெளியிட்டீர்களே என்றார்கள். அப்போதுதான் நான் அப்படியான உண்மை அறியும் குழு ஒன்றில் பங்கேற்றது குறித்த நினைவு அரைகுறையாக வந்தது. 1995 இல் நடந்த பெரும் கொடுமை அது. எங்கள் உண்மை அறியும் குழு அப்போது உருவாகவில்லை. பி.யு.சி.எல் அமைப்பு அமைத்திருந்த ஒரு குழுவில் நானும் இருந்தேன் என நினைவு. எஸ்.வி.ஆர் இருந்ததும் நினைவுக்கு வந்தது. வழக்கம்போல அறிக்கை எழுதும் பணி எனக்குக் கொடுக்கப்பட்டது. குழுசார்பாக நான் எழுதிய முதல் அறிக்கைகளில் ஒன்று அது. தற்போது விவரங்கள் துல்லியமாக நினைவில்லை. என்னுடைய அறிக்கைகள் எல்லாம் தொகுக்கப்பட்டுகின்றன. ஆனால் தற்போது கைவசம் இல்லை. 2000 க்குப் பின் உள்ளவைதான் இப்போது கணினி அல்லது இணையங்களில் கிடைக்கும். எனவே இப்போது பேசச் சாத்தியமில்லை எனச் சொல்லித் தவிர்த்துவிட்டேன்.
எனினும் நினைவுகளைச் சுரண்டியும் பதிவுகள் சிலவற்றில் இருந்த தகவல்களைத் தொகுத்தும் பிறகு என்னிடம் கருத்து கேட்ட இளைஞர்களிடம் சிலவற்றைச் சொல்லி நீங்களே எழுதிக் கொள்ளுங்கள் என்றேன். அநேகமாக ‘கர்ணன்’ திரைப்படத்தை ஒட்டித்தான் ஊடகங்களுக்கு இந்தப் பிரச்சினையில் ஆர்வம் வந்துள்ளது எனலாம்.
ஜெயலலிதா தலைமையில் இருந்த அதிமுக ஆட்சியின்போதுதான் அந்த சாதிவன்முறைகள் நடந்தேறின. மூன்று கட்டங்களாக அது நடந்தது.
1.வன்முறை தொடங்கியது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவகிரி கிராமம். ஜூலை 30, 1995 அன்று அது நடந்தது.
2.அடுத்து அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டம் சிங்காதகுறிச்சி எனும் இடத்தில் நடந்த சாதிய வன்முறை. ஆக 31, 1995 இல் இது நடந்தது.
3.மூன்றாவதுதான் கொடியன்குளம், தேதி: ஆக 31, 1995. முதல் இரண்டு சாதீயக் கலவரங்களுக்கும் இதற்கும் உள்ள ஒரு வேறுபாடு என்னவெனில் முன்னது இரண்டும் இரு சாதிகளுக்குள் நடந்த மோதல்கள். பங்குபெற்ற முக்கிய சாதிகள் தேவர்கள் மற்றும் தேவேந்திரகுல வேளாளர்கள். இன்ந்த மூன்றாவது வன்முறை என்பது கொடியன்குளம் எனும் முழுக்க முழுக்க தலித் மக்களே இருந்த அந்தக் கிராமத்தில் ஒளிந்திருந்ததாகச் சொல்லப்படும் கொலைக் குற்றத்தில் தேடப்பட்ட சிலகுற்றவாளிகளைத் தேடச் சென்ற சுமார் 500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு மேற்கொண்ட கொடும் வன்முறை.
மொத்தத்தில் சுமார் 18 பேர்கள் கலவரத்தில் கொல்லப்பட்டதாக நினைவு.
திருநெல்வேலி தேவர்கள் அதிகமுள்ள பகுதி. தூத்துக்குடி ஒபீட்டளவில் தேவேந்திரர்கள் அதிகம் உள்ள பகுதி. கொடியன்குளம் முழுக்க முழுக்க தேவேந்திரர்கள் உள்ள கிராமம். அது மட்டுமல்ல அங்கு இருந்த தேவேந்திரர்கள் ஓரளவு வசதியானவர்கள். அந்த வகையில் அங்கு அந்த வன்முறையை அரங்கேற்றிய காவல்துறை கொடும் வன்மத்துடன் அப்பகுதி மக்களின் சொத்துக்களை அழித்தது. டெலிவிஷன் கருவிகள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் பெரிய அளவில் அழிக்கப்பட்டன.
எல்லாவற்றையும் விடப் பெருங்கொடுமை அங்கிருந்த கிணறுகளில் எல்லாம் டீசல், பெட்ரோல் முதலியவற்றை ஊற்றி குடிக்கத் தண்ணீர் இல்லாமலும் செய்யப்பட்டது என அப்போது ஃப்ரண்ட்லைன் இதழில் அது தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரை குறிப்பிட்டது. இத்தனையும் சாதி வெறியுடன் காவல்துறையால் நிறைவேற்றப்பட்ட அத்துமீறல்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
(அடுத்த பதிவுடன் முடியும்: இது தொடர்பாக அமைக்கப்பட்ட கோமதி நாயகம் கமிஷன் அறிக்கையின் மோசமான பக்கச் சார்பு, அவ்வறிக்கை ஜெயா ஆட்சியில் முடக்கப்பட்டுப் பின் கருணாநிதி தலைமையில் அமைந்த திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டது. மொத்தத்தில் தேவேந்திரர்களுக்கு அந்தக் கலவரத்தில் நியாயம் செய்யப்படாமை முதலியவற்றை அடுத்துக் காணலாம்).” என்று குறிப்பிட்டுள்ளர்.
பேராசிரியர் அ.மார்க்ஸ் தனது 2வது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
“கோமதிநாயகம் கமிஷன் அறிக்கை: வெந்த புண்ணில் ஒரு வேல்…
கொடியன்குளம் பிரச்சினை என்ன சார் -2
இந்தக் கட்டுரையின் முதல்பகுதியைப் படித்த ஒரு தோழர் இப்போது நாம் பேசிக் கொண்டுள்ள இந்தத் “தென் மாவட்டக் கலவரங்கள்” குறித்த கோமதிநாயகம் குழு அறிக்கை பற்றி முன்னாள் DGP வைகுந்த் (கலவரத்தின்போது DGP யாக இருந்தவர்) ஃப்ரண்ட் லைன் இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றை அனுப்பி இருந்தார். அது ஒரு முக்கியமான ஆவணம்.
தற்போது பணி ஓய்வுபெற்றுள்ள திரு வைகுந்த் அன்று தன் போலீஸ் படை செய்த அநீதிகளை முழுமையாக ஏற்றுக் கொள்கிறார். அப்போதிருந்த ஒரு DSP ரேங்க் அதிகாரியைத் தான் தனியே கூப்பிட்டு விசாரித்ததாகவும் அவர் முழுக்க முழுக்க தேவேந்திர மக்கள் வசித்த கிராமமான கொடியன்குளத்தில் அந்த நான்கு மணி நேரம் காவல்துறை செய்த அத்துமீறல்களை அப்படியே ஒத்துக்கொண்டதையும் பதிவு செய்கிறார். வைகுந்தின் கருத்தைக் கேட்ட ஜெயா அவரது ஆலோசனையின்படி கொடியன்குளம் கிராமத்தில் போலீஸ் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு அளிக்க 17 லட்சரூ அறிவித்ததோடு, கலவரத்தில் சம்பந்தப்பட்ட இரு சாதியினரும் அல்லாத மூன்று அமைச்சர்களை அப்பகுத்திக்கு அனுப்பவும் செய்தார். மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்த கொடியன்குளம் மக்களுக்கு இவை எந்த ஆறுதலையும் அளிக்கவில்லை. அவர்கள் இவற்றைக் கண்டுகொள்ளவில்லை.
தேவேந்திர குல மக்களை இது வெகுவாக பாதித்திருந்ததும், நாங்கள் உண்மை அறியச் சென்றபோது கொடியன்குளம் கிராமமே வெறிச்சோடிக் கிடந்ததும் எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. நண்பர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதுபோல அப்பகுதியில் தேவேந்திரர்கள் எல்லோரும் குறிப்பிட்ட அளவு வசதியானவர்கள். அதுவும் ஆதிக்கத்தில் இருதோருக்கு எரிச்சல்தான்.
கொடியன்குளத்தாக்குதலில் காவல்துறையினர் மிகப் பெரிய அளவில் டி.வி. இரு சக்கரவாகனங்கள், வீடுகள் ஆகியவற்றை நாசம் செய்ததன் பின்னணி இதுதான்.
ஜெயா அரசு இது தொடர்பாக அமைத்திருந்த முன்னாள் மாவட்ட நீதிபதி கோமதிநாயகம் குழுவை தேவேந்திர மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கோமதிநாயகம் அது குறித்தெல்லாம் கவலைப்படாமல் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவான ஒரு மிக மோசமான, அறிக்கையை அளித்தார்.
கொடியன்குளத்தில் நடந்தவை சாதி அடிப்படையிலான மோதல்கள் அல்ல என்றது அவரது அறிக்கை. அது மட்டுமல்ல கற்பனை செய்ய இயலாத அளவிற்கு இன்னொரு கொடும் பரிந்துரையையும் அது அளித்தது. சாதி அடிப்படையில் அளிக்கப்படும் உதவிகள், உரிமைகள் எல்லாவற்றையும் ரத்துசெய்ய வேண்டும் என்பதுதான் அது.
ஜெயலலிதா அரசு இந்த அறிக்கையை வெளியிடவில்லை. ஆனால் அந்த அறிக்கை சொன்னவற்றில் அது சாதி அடிப்படையிலான மோதல் அல்ல என்பதை மட்டும் ஏற்றுக் கொண்டது.
1996 மாநிலத் தேர்தலில் தமிழக மக்கள் அ,தி,மு.கவிற்கு நல்ல பாடம் ஒன்றைக் கற்பித்தனர். அக்கட்சி தோற்கடிக்கப்பட்டு கருணாநிதி தலைமையில் தி.மு.க ஆட்சி அமைந்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது தி.மு.க இப்பகுதியில் கொடியன்குளப் பிரச்சினையில் ஜெயலலிதா அரசின் போக்கைக் கடுமையாக விமர்சித்தது.
1996 முதல் ஆட்சியில் இருந்தபோதும் திமுக அடுத்த இரண்டாண்டுகள்வரை கோமதிநாயகம் அறிக்கையை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இறுதியில் நவ 23, 1999 அன்று அவ் அறிக்கை வெளியிடப்பட்ட போது அதில் இருந்த சர்ச்சைக்குரிய வாசகமான, “இந்த மோதலை ஒரு ’சாதிக் கலவரம்’ எனச் சொல்வது பொருத்தமற்றது (misnomer)” என்பதைப் பதிவு செய்து கமிஷனின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டது. இதைச் சுட்டிக்காட்டும் Frontline இதழ், “1995 இல் இக்கலவரம் நடந்தபோது இதே தி.மு.க இந்தக் கொடியன்குளம் போலீஸ் (அத்துமீறல்) நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்ததோடு 1996 தேர்தலில் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வெற்றி பெற்றது” - என்பதைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.
ஆம் எல்லாம் இப்படித்தான் நடந்துவிடுகிறது. அரசுகள் அரசுகள்தான் . ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பது அரிதுதான்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.