தீபாவளி பண்டிகையை முன்னிட்ட வெளியாகும் திரைப்படங்களுக்கு 7 நாட்கள் சிறப்பு காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆண்டுதோறும் பண்டிகை நாட்களில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வருவது வழக்கம். இந்த நாட்களில் அதிகாலை ஷோ மற்றும் சிறப்பு காட்சிகள் திரையிடப்படும். இதற்காக அரசிடம் தனியான அனுமதி பெற வேண்டியது அவசியம். அநத வகையில் அடுத்து வாரம் தீபாவளி பண்டியை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.
சர்தார்
இரும்புத்திரை மற்றும் ஹீரோ படங்களை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள 3-வது படம் சர்தார். காஷ்மோரா படத்திற்கு பிறகு கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில், ராஷிஷா விஜயன், ராஷி கண்ணா ஆகியோருடன் நடிகை லைலா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். உளவாளி தொடர்பான கதையம்சம் கொண்ட இந்த படத்தில் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பிரின்ஸ்
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகரான உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன் நேரடியாக தெலுங்கில் நடித்துள்ள படம் பிரின்ஸ். பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ள இந்த படத்தில் மரியா ரியாபுஷ்பாக என்ற வெளிநாட்டு நடிகை நாயகியாக நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். காதல காமெடி படமாக தயாராகியுள்ள இந்த படத்தில் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
7 நாட்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி
இந்த இரண்டு படங்களும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 21-ந் தேதி (நாளை) வெளியாக உள்ளது. இந்த படங்களுக்கு சிறப்பு காட்சிகள் அனுமதிக்க வேண்டும் என்று கூறி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு வரும் 21-ந் தேதி முதல் அக்டோபர் 27-ந் தேதி வரை 7 நாட்கள் சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு திரையரங்கு உரிமையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே சார்தார் மற்றும் பிரின்ஸ் இரண்டு படங்களும் முன்பதிவும் வேகமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த டான் என இவர்களின் முந்தைய படங்கள் வெற்றிக்கனியை பறித்துள்ளதால் இந்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தை இயக்கியது சர்தார் படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil