ஏ.ஆர். ரஹ்மான் மகள் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் முகத்தை மூடிக்கொண்டு புர்கா அணிந்திருந்தது சமூக வலைதளங்களில் விமர்சனத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சர்ச்சைக்கு அவரே தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஸ்லம்டாக் மில்லியனர் படம் ஆஸ்கர் விருதுகளை பெற்று 10 ஆண்டுகள் நிறைவாகியுள்ளதைக் கொண்டாடுவதற்கான விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மகள் கதீஜா ரஹ்மானும் கலந்துகொண்டனர். அப்போது கதீஜா ரஹ்மான் தனது தந்தை குறித்து மிகவும் பெருமையாக, உணர்ச்சிகரமாக பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ரஹ்மானின் மகள் முகத்தை மூடிக்கொண்டு புர்கா அணிந்திருந்தார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் பழைமைவாதத்தை கடைப்பிடிக்கிறார் என்று பலரும் குற்றம்சாட்டினர்.
ஏ.ஆர். ரஹ்மான் மகள் ஆடை சர்ச்சை
இதனையடுத்து இதற்கு பதிலளிக்கும் விதமாக, நிதா அம்பானியுடன் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி மற்றும் மகள்கள் நிற்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான், எனது குடும்பப் பெண்கள் நிதா அம்பானியுடன் இருந்தபோது என்று கேப்ஷன் கொடுத்து அவரவர் ஆடையைத் தேர்வு செய்துகொள்வதற்கான சுதந்திரம் அவரவர்க்கு உண்டு என ஹேஷ்டேகில் தெரிவித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டிருந்த புகைப்படத்தில் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படி ஒவ்வொரு ஆடை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
February 2019
இந்நிலையில் ரஹ்மான் மகள் கதீஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், அண்மையில் மேடை நிகழ்ச்சியில் என் தந்தையுடன் நான் பேசிய உரையாடல் பரவலாக வலம்வந்து கொண்டிருக்கிறது. எனினும், நான் உடுத்திய ஆடை எனது தந்தையால் கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதாகச் சில கருத்துகள் வெளியாகியுள்ளன. நான் உடுத்தும் ஆடைகளுக்கும், எனது பெற்றோருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் உடுத்தியிருந்த முகத்திரையை நான் விரும்பியே உடுத்தினேன்.
எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்வதற்கான முதிர்ச்சி எனக்கு உள்ளது. எந்தவொரு நபருக்கும் அவர் விரும்பும் ஆடையை உடுத்த சுதந்திரமுண்டு. அதைத்தான் நானும் செய்துகொண்டிருக்கிறேன். ஆகையால், உண்மையான சூழல் என்னவென்பதை தெரிந்துகொள்ளாமல் நீங்களாகவே முடிவுகளை எடுக்க வேண்டாம் என தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.