தமிழ் சினிமா பாடல்கள் என்றாலே 70-களைச் சேர்ந்தவர்கள் பலரும் கவிஞர் கண்ணதாசன் போல எழுதமுடியுமா என்று கேட்பார்கள். காதல், காமம், சோகம், கொண்டாட்டம், பிறப்பு, இறப்பு என எல்லா சூழ்நிலைகளுக்கு கவிஞர் கண்ணதாசன் பாடல்களை எழுதியுள்ளார்.
கடவுளைப் பற்றி பாடல் எழுதும்போதும் பக்தியும் தத்துவமும் சொட்ட பாடல் எழுதியிருக்கிறார். சிவபெருமானைப் பற்றி பாடல் எழுதும்போது, எண்களை வைத்து பாடல் எழுதியிருக்கிறார். அது கண்ணதாசனின், அது காலத்தால் அழியாத ஒரு பாடல். திருவிளையாடல் படத்தில் இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் இசையில், கவிஞர் கண்ணதாசன் எழுதி கே.பி. சுந்தராம்பாள் பாடிய அந்த பாடல் மிகவும் புகழ்பெற்ற பாடலானது.
“ஒன்றானவன்
உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்றான வேதத்தில் நான்கானவன்
நமசிவாய என ஐந்தானவன்
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
பத்தானவன்
பன்னிரு கை வேலவனைப் பெற்றானவன்
முற்றானவன் மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்” என்ற பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல்.
இந்த பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியபிறகு, அந்த படத்தின் இயக்குநர் ஏ.பி. நாகராஜ்-க்கு ஒரு சந்தேகம் எழுந்துள்ளது.
இயக்குநர் ஏ.பி. நாகராஜ் தனது சந்தேகத்தைக் கேட்டுள்ளார். கவிஞரே ஒன்றில் இருந்து 12 வரை எழுதியுள்ளீர்கள். ஆனால், 10 க்குப்பிறகு 12 வருகிறதே, 11 எங்கே என்று கேட்டிருக்கிறார்.
இதற்கு, கவிஞர் கண்ணதாசன், பாடலை நன்றாக ஒருமுறை கவனியுங்கள், இறைவன் முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன் என்று – அதாவது 10 க்கும் 12 க்கும் நடுவான 11 அதில் அடக்கம் என்று கூறியிருக்கிறார்.
இத்தகைய பாடல்களுக்கு இலக்கியத்தில் எண்ணலங்காரம் என்று கூறுவார்கள். கண்ணதாசன் திருவிளையாடல் படத்தில் சிவபெருமானுக்கு எழுதிய எண்ணலங்காரப் பாடல் இன்றைக்கும் பிரபலமான பாடல்தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“