Advertisment

கண்ணதாசனுக்கு நள்ளிரவில் போன் போட்டு பாடல் வரிகளை மாற்றச் சொன்ன எஸ்.பி.பி: கவிஞரின் ஹாட் ரியாக்ஷன்

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவிஞர் கண்ணதாசனுக்கு நள்ளிரவில் போன் போட்டு பாடல் வரிகளை மாற்றச் சொன்னதற்கு கவிஞர் கண்ணதாசன் செய்த ஹாட் ரியாக்ஷன் நிகழ்வு குறித்த தகவலை அண்ணாதுரை கண்ணதாசன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
kananadasan spb

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவிஞர் கண்ணதாசனுக்கு நள்ளிரவில் போன் போட்டு பாடல் வரிகளை மாற்றச் சொன்னதற்கு கவிஞர் கண்ணதாசன் செய்த ஹாட் ரியாக்ஷன்

ஆளுமைகளின் வாழ்க்கை நிகழ்வுகள் வரும் தலைமுறையினருக்கு காலம் கடந்தும் மிகவும் சுவாரசியமானவையாக இருக்கும். ஆளுமைகளுக்கு இடையேயான உரையாடல்களும் மிகவும் சுவாரசியம் மிக்கதாக இருக்கும். 

Advertisment

தமிழ் சினிமாவில் கவியரசு என்று போற்றப்பட்ட கவிஞர் கண்ணதாசனின் பல பாடல்கள் சாகா வரம் பெற்றவை. வாழ்க்கைத் தத்துவத்தை திரைப்படல்களில் வடித்தவர். அதனாலேயே, பாடலாசிரியர் என்றால் கவிஞர் கண்ணதாசன் தான் என்று கூறுவது உண்டு. கவிஞர் கண்ணதாசனைப் பற்றியும் வாழ்க்கை நிகழ்வுகளைப் பற்றியும் அவருடைய மகன் அண்ணாதுரை கண்ணதாசன் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவிஞர் கண்ணதாசனுக்கு நள்ளிரவில் போன் போட்டு பாடல் வரிகளை மாற்றச் சொன்னதற்கு கவிஞர் கண்ணதாசன் செய்த ஹாட் ரியாக்ஷன் நிகழ்வு குறித்த தகவலை அண்ணாதுரை கண்ணதாசன் கூறியுள்ளார். 

அந்த சுவாரசியமான நிகழ்ச்சி என்ன என்று பார்ப்போம்.

தமிழ் சினிமா இசை ரசிகர்களால் பாடும் நிலா என்று கொண்டாடப்படும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் செப்டம்பர் 25, 2020-ல் காலமானார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை. 

கவிஞர் கண்ணதாசன் பார்ட்னராக இருந்து தயாரித்த ஹோட்டல் ரமா என்ற படத்தில்தான் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தமிழில் பாடகராக முதலில் பாடிய பாடல். அந்த படத்தில் ‘அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு, அட எத்தனை நாளாச்சு” என்ற பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார். ஆனால், இந்த படம் அப்படியே நின்றுபோனதால், அந்த பாடல் வெளிவரவில்லை. இதை நினைவில் வைத்துக்கொண்டு, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை நினைவில் வைத்துக்கொண்டு  ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடலைப் பாட வைத்துள்ளார். இதுதான், எஸ்.பி. பாலசுப்ரமணியம் தமிழில் பாடிய முதல் பாடல். 

அதற்கு பிறகு, பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மிகவும் பிரபலமான பாடகராக வளர்ந்துவிட்டார். தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பாடல்களைப் பாடினார். நிற்க நேரமில்லாத அளவுக்கு பிஸியான பாடகராக இருந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், எந்த அளவுக்கு பிஸியாக இருந்திருக்கிறார் என்றால், தமிழ் சினிமாவில் பாடுவதற்கு சென்னையில் 2-3 நாட்கள் இருந்து காலையில் இருந்து இரவு 12 - 1 மணி வரைக்கும் ஒரு நாளில் 8 - 9 பாடல்கள் என்று 30-40 பாடல்கள் பாடி முடித்துவிட்டு, அப்படியே விமானத்தில் ஐதராபாத் சென்று அங்கே 2-3 நாட்கள் இருந்து 30-40 பாடல்கள் பாடிவிட்டு மீண்டும் சென்னை வருவது,  கேரளா செல்வது, மும்பை செல்வது என்று பிஸியாக இருந்திருக்கிறார். விமானம் பிடித்து செல்லும் அந்த ஒருநாள்தான் அவர் ஓய்வாக இருந்திருக்கிறார்.

அதனால், அந்த கால கட்டத்தில் எல்லா இசையமைப்பாளர்களும் யாரையாவது டம்மியாக பாட வைப்பார்கள். அதாவது ட்ராக் வாய்சில் பாட வைத்து பதிவு செய்துவிடுவார்கள். அதற்கு பிறகு, எஸ்.பி. பாலசுப்ரமணியத்திடம் டைம் கேட்டு அவர் வந்து பாடிக்கொடுத்துவிட்டு செல்வாராம். 

அப்படி ஒருநாள், இசையமைப்பாளர் இளையராஜா இசையில், பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இரவு 11 மணிக்கு பாடல் பாடிக்கொண்டிருக்கிறார். அந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன், அந்தப் பாடலைப் பாடும்போது ஒரு வார்த்தை இடிக்கிறது. அதனால், அந்த பாடல் வரிகளை சரி செய்ய வேண்டும், அதை கவிஞர் கண்ணதாசனிடம் எப்படி கேட்பது என்று ஒரு தயக்கம் இருந்திருக்கிறது. இந்த பாடலை பின்னாள் பதிவு செய்துகொள்ளலாம் என்றால், எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடல் பதிவிற்காக ஆந்திரா, கேரளா, மும்பை என்று போய்விட்டால் 2 - 3 வாரம் ஆகிவிடும். ஆனால், பாடலை உடனே பதிவு செய்து ஷூட்டிங் போக வேண்டுமே என்பதால் கவிஞர் கண்ணதாசனிடம் பாடல் வரிகளை மாற்றித் தரச்சொல்லி எப்படி கேட்பது என்ற தயக்கம் இருந்திருக்கிறது.

அப்போது, இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், எஸ்.பி. பாலசுப்ரமணியத்திடம்,  “நீ கவிஞர் கண்ணதாசனிடம் போன் பண்ணி கேட்கிறயா?” என்று கேட்டிருக்கிறார். இதற்கு, எஸ்.பி. பாலசுப்ரமணியம், எதுவும் யோசிக்காமல்  “கவிஞரிடம் பேசிவிடுவோமே” என்று சொல்லிவிட்டு, காலையில் இருந்து பாடிக்கொண்டிருந்ததால் நேரம் போனது தெரியாமல் இரவு 11 மணிக்கு மேல் கவிஞர் கண்ணதாசனுக்கு போன் செய்திருக்கிறார். 

மறுமுனையில், “நான் கண்ணதாசன் பேசுகிறேன்” என்று கேட்டிருக்கிறார். 

பதிலுக்கு, எஸ்.பி.பி, “அண்ணே, நான் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பேசறண்ணே” என்று கூறியிருக்கிறார்.

அதற்கு, கண்ணதாசன்,  “ஹாங், சொல்லுங்க தம்பி, என்ன விஷயம்” என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு, எஸ்.பி. பாலசுப்ரமணியம், அண்ணே, இந்த மாதிரி ரெக்கார்டிங்  தியேட்டர்ல இருக்கிறேன், நீங்கள் எழுதிய பாட்டு வார்த்தை இடிக்கிறது, அதை நீங்கள் மாற்றிக்கொடுதால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். 

மறுமுனையில், சில நொடிகள், அமைதி,  “என்ன சொலுங்க” என்று கண்ணதாசன் கேட்டிருக்கிறார். 

அதற்கு எஸ்.பி. பாலசுப்ரமணியம், அந்த வார்த்தையை மாற்றிக் கொடுத்தீர்கள் என்றால் என்று கேட்டிருக்கிறார். அதற்கு, பாடுங்கள் என்று கண்ணத்தாசன் கேட்டிருக்கிறார். 

எஸ்.பி. பாலசுப்ரமணியம், அந்த மூன்று வரிகளைப் பாடி, எந்த வரியை மாற்ற வேண்டும் என்பதைச் சொல்லியிருக்கிறார்.

உடனே கண்ணதாசன், நான் ஒரு வரி சொல்கிறேன் எழுதிக்கச் சொல்லுங்கள் என்று கண்ணதாசன் போனிலேயே சொல்ல, ரெக்கார்டிங் தியேட்டரில் எஸ்.பி.பி போனில் கேட்டு சொல்ல அருகே இருந்த கங்கை அமரன் எழுதியிருக்கிறார்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம், மாற்றிய அந்த வரிகளைப் பாடிக் காட்டி, இப்பொது அளவு சரியாக இருக்கிறது, ரொம்ப நன்றி அண்ணெ என்று கூறியிருக்கிறார்.

ஆனால், கண்ணதாசன், “அப்புறம், தம்பி இப்போது மணி என்ன” என்று கேட்டிருக்கிறார்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் மணி பார்த்துவிட்டு, இரவு 11.30 மணி என்று கூறியிருக்கிறார். எஸ்.பி.பி-க்கு அப்போதுதான் இரவு 11.30 மணி ஆகிவிட்டது தெரிந்திருக்கிறது.

மறுமுனையில் கண்ணதாசன், “இந்த நேரத்திற்கு போன் பண்ணலாமா? நீங்கங்கறதால நான் ஒன்னும் சொல்லல, ஆனால், இதுவே கடைசியா இருக்கட்டும், இதுக்கு அப்புறம், இந்த மாதிரி ராத்திரி, 11 மணி, 11.30 மணிக்கு எல்லாம் போன் பண்ணி கரெக்‌ஷன் கேட்கக் கூடாது, சரியா” என்று ஹாட்டாக சொல்லியிருக்கிறார்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம், “சரிண்ணே, சரிண்ணே” என்று சிரித்துக்கொண்டே சொல்லி போனை வைத்திருக்கிறார். இந்த நிகழ்வைப் பற்றி எஸ்.பி. பாலசுப்ரமணியம், அண்ணாதுரையின் சகோதரி மகனிடம் சொல்லியிருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kannadasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment