கவிஞர் கண்ணதாசன் மிகச் சிறந்த திரைப்படப் பாடலாசிரியர் மட்டுமல்ல, திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். கண்ணதாசன் பல நல்ல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். மிகச் சிறந்த பாடலாசிரியராக தமிழ் சினிமா உலகை கட்டி ஆண்டவர் கவிஞர் கண்ணதாசன். அவர் தனது வாழ்க்கை அனுபவங்களை வனவாசம் என்று நூலாக எழுதியுள்ளார். அதில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ள சம்பவங்களை சித்ரா லட்சுமணன் தனது டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.
அதில், கவிஞர் கண்ணதாசன் சினிமா தயாரிப்பில் பெரும் நஷ்டம் அடைந்து கடன் ஏற்பட்டது. அதனால், வாங்கிய கடனுக்கு ஈடாக தான் வைத்திருந்த 10 கார்களையும் கொண்டுபோய் நிறுத்திய சோகக் கதையை சித்ரா லட்சுமணன் குறிப்பிட்டுள்ளார்.
கவிஞர் கண்ணதாசன் திரைப்படத் தயாரிப்பாளராக பல நல்ல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். அவர் தயாரித்த மிகச் சிறந்த திரைப்படம், சிவகங்கைச் சீமை, இந்த படத்தில் எஸ்.எஸ். ராஜேந்திரன், எஸ். வரலட்சுமி பி.எஸ். வீரப்பா எம்.என். ராஜம் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் வெற்றி பெற்றதா என்றால் இல்லை. மாபெரும் தோல்விப் படமாக அமைந்தது. இதனால், கண்ணதாசன் பொருளாதார ரீதியாக நெருக்கடியில் இருந்தார்.
அதனால், கவிஞர் கண்ணதாசனுக்கு உதவி செய்ய பீம்சிங் முன்வந்தார். சிவாஜியை வைத்து, பீம்சிங் ஒரு படத்தை இயக்கி தருவதாகக் கூறினார். ஆனால், கவிஞர் கண்ணதாசன், நடிகர் சிவாஜி கணேசனைத் தவிர்த்து, நடிகர் சந்திரபாபுவை கதாநாயகனாக வைத்து கவலை இல்லாத மனிதன் திரைப்படத்தை தயாரிப்பதாக முடிவானது. இந்த படத்திற்கு கவிஞர் கண்ணதாசன் கதை எழுதினார். இந்த படத்தை இயக்குநர் கே. சங்கர் இயகினார்.
கவலை இல்லாத மனிதன் படம் தயாரிக்கத் தொடங்குவதற்கு முன்பே, பலரும் கவிஞர் கண்ணதாசனிடம் சந்திரபாபுவை ஹீரோவாகப் போட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள். காரணம், சந்திரபாபு படப்பிடிப்புக்கு நேரத்திற்கு வரமாட்டார். ஒப்புக்கொண்ட சம்பளத்திற்கு மேல் அதிகமாக பணம் கேட்பார். பணம் கொடுத்தாலும், நேரத்துக்கு வரமாட்டார் என்று கூறியுள்ளார்கள். ஆனால், கவிஞர் கண்ணதாசன் அதையெல்லாம் கேட்காமல் சந்திரபாபுவை வைத்து திரைப்படம் தயாரிப்பு பணிகள் தொடங்கியது.
கவலை இல்லாத மனிதன் படத்தில், சந்திரபாபு உடன் எம்.ஆர். ராதா, டி.எஸ். பாலையா, ராஜசுலோச்சனா, டி.ஆர். மகாலிங்கம், எம்.என். ராஜம், எல்.விஜயலட்சுமி ஆகியோ நடித்தனர்.
படப்பிடிப்பின்போது, எல்லோரும் காலையில் 8 மணிக்கு படபிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்து மேக் அப் போட்டுகொண்டு 9 மணிக்கு எல்லாம் தயாராக இருப்பார்கள். ஆனால், ஹீரோ சந்திரபாபு காலையில் 9 மணிக்கு தூங்கி எழுந்து, 10 மணிக்கு கிளம்பி 11 மணிக்கு சென்று மேக் அப் போட்டுக்கொண்டு தயாராகி வருவதற்கு 12 ஆகிவிடும். இதனால், மற்ற நடிகர்கள் சந்திரபாபுவுக்காக காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. இது ஒருநாள் 2 நாள் என்றால் பரவாயில்லை. எல்லா நாளும் இப்படியே காலதாமதமாக வந்திருக்கிறார் சந்திரபாபு.
இதனால், கடுப்பான எம்.ஆர். ராதா, டி.எஸ். பாலையா போன்ற சீனியர் நடிகர்கள் தயாரிப்பு நிர்வாகி வீரையாவிடம், சந்திரபாபுவை படப்பிடிப்புக்கு சீக்கிரம் நேரத்துக்கு வரச் சொல்லுங்கள் என்று தயாரிப்பாளர் கவிஞர் கண்ணதாசனைச் சொல்லச் சொல்லுங்கள் என்று கூறியிருக்கின்றனர். கண்ணதாசனும், சந்திரபாபுவிடம் படப்பிடிப்புக்கு நேரத்துக்கு செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், சந்திரபாபு கேட்கவில்லை. வழக்கம்போல, தாமதமாக சென்றுள்ளார்.
ஒருநாள் சந்திரபாபுவுக்கு பாடம் கற்றுக்கொடுக்க நினைத்த எம்.ஆர். ராதாவும், டி.எஸ். பாலையாவும் அவர்கள் படப்பிடிப்புக்கு வழக்கமாக செல்லும் நேரத்திற்கு சென்றுவிட்டனர். ஆனால், 11 மணிக்கு சந்திரபாபு வந்ததும் யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் எம்.ஆர். ராதாவும், டி.எஸ். பாலையாவும் கிளம்பிச் சென்றுவிட்டனர். இதனால், அன்றைய ஷூட்டிங் ரத்தானது.
தயாரிப்பாளர் கவிஞர் கண்ணதாசன் மீண்டும் சந்திரபாபுவைத் தொடர்புகொண்டு படப்பிடிப்புக்கு நேரத்துக்கு சீக்கிரமாகச் செல்லுங்கள், நீங்கள் தாமதமாக செல்வதால் படப்பிடிப்பு பாதிக்கப்படுகிறது என்று கூறியிருக்கிறார். அதற்கு, நான் நேரத்திற்கு செல்ல வேண்டுமானால், சற்று சம்பளம் கூடுதலாகத் தர வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கும் கண்ணதாசன் ஒப்புக்கொண்டு, அந்தக் காலத்திலேயே கூடுதலாக 20,000 சம்பளம் கொடுத்திருக்கிறார்.
ஒருநாள் இயக்குநர் கே. சங்கர், இந்த படத்தின் முக்கியமான காட்சியை எடுக்க வேண்டும், சந்திரபாபு நேரத்துக்கு வர வேண்டும் என்று கவிஞர் கண்ணதாசனிடம் கூறுகிறார். கவிஞர் கண்ணதாசனும் சொல்கிறேன் என்று கூறுகிறார். நாமே நேரில் சென்று சொல்லிவிடலாம் அன்று காலை, சந்திராபு வீட்டிற்கு சென்று கதவைத் தட்டியிருக்கிறார். கதவைத் திறந்த சந்திரபாபுவின் உதவியாளர், சார் தூங்கிக்கொண்டிருக்கிறார் என்று கூறியிருக்கிறார். சரி, கவிஞர் கண்ணதாசன் வந்திருக்கிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள். நான் காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். கவிஞர் கண்ணதாசன், சந்திரபாபுவின் வீட்டிலேயே நாற்காலியில் 2 - 3 மணி நேரம் காத்திருக்கிறார். ஆனால், சந்திரபாபு வரவில்லை. மீண்டும் சந்திரபாபுவின் உதவியாளரை அழைத்து, இன்னும் எழுந்துகொள்ளவில்லையா, அவரை எழுப்புங்கள் என்று கூறியிருக்கிறார். அதற்கு சந்திரபாபுவின் உதவியாளர், அவர் அப்போதே பின் வாசல் வழியாகப் போய்விட்டார் என்று கூறியிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கண்ணதாசன், சரி என்று மனதை தேற்றிக்கொண்டார். தயாரிப்பாளர் நம்மைப் பார்ப்பதற்கு சங்கடப்பட்டுக்கொண்டு பின் வாசல் வழியாக ஷூட்டிங் சென்றிருக்கிறார் என்று கவிஞர் கண்ணதாசன் மனதைத் தேற்றிக்கொண்டார்.
பிறகு, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போன் போட்டு, அங்கே சந்திரபாபு வந்துவிட்டாரா என்று கேட்டதற்கு, வரவில்லை என்று கூறியிருக்கிறார்கள். இப்படி, சந்திரபாபு செய்த குளறுபடிகள் பலவற்றைத் தாண்டி கவலை இல்லாத மனிதன் திரைப்படம் தயாராகி வெளியானது.
கவலை இல்லாத மனிதன் பெரும் தோல்வி அடைந்தது. இதனால், கண்ணதாசன் 5 லட்சம் ரூபாய் கடனானது. கடனுக்கு வட்டி கட்டவே தான் பாட்டு எழுதி சம்பாதித்த பணம் சரியாக இருந்தது. அதனால், அப்போது 11 கார்கள் வைத்திருந்த கவிஞர் கண்ணதாசன், தனக்கு ஒரே ஒரு ஃபியட் கார் மட்டும் வைத்துக்கொண்டு மற்ற 10 கார்களையும் கடனுக்கு ஈடாக கடன் கொடுத்தவர்களின் வீட்டுக்கு எடுத்துச் சென்று நிறுத்தியுள்ளார். சந்திரபாபுவால் மிகப்பெரிய நஷ்டம் அடைந்தார் கவிஞர் கண்ணதாசன்.
இந்த தோல்வி குறித்து கவிஞர் கண்ணதாசன் தனது வனவாசம் நூலில் எழுதியுள்ளார். எந்த தொழிலிலும் பக்தி பணிவு அர்ப்பணிப்பு இருக்க வேண்டும். ஆணவம் இருக்கக்கூடாது. ஆணவம் இருந்தால், அழிந்துபோவார்கள். இந்த சினிமா துறையில் 25 ஆண்டுகளாக நான், எம்.எஸ். விஸ்வநாதன், மகாதேவன் எல்லோரும் இருக்கிறார்கள் என்றால், தொழில் பக்திதான் காரணம். ஆனால், சந்திரபாபுவுக்கு தொழில் பக்தி இல்லை. ஆனால், ஆணவம் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், படத்துக்கு கவலை இல்லாத மனிதன் என்று பெயர் வைத்ததற்காக கடவுள் தன்னை தண்டித்துவிட்டதாக கவிஞர் கண்ணதாசன் மனதைத் தேற்றிக்கொண்டார். கவலை இல்லாத மனிதன் யாராவது இருக்க முடியுமா? அதனால்தான், கடவுள் தனக்கு கவலையைக் கொடுத்திருக்கிறார் என்று கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து ய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.