தமிழ் சினிமா உலகில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பாடலாசிரியராக வெற்றி நடை போட்டவர், வாலிபக் கவிஞர் என்று கொண்டாடப்பட்டவர் கவிஞர் வாலி. கவிஞர் வாலி தனது வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களை பல்வேறு நேர்காணல்களில் நினைவுகூர்ந்து பேசியுள்ளார். அப்படி, எம்.ஜி.ஆர் படத் தயாரிப்பாளர் ஒருவர், கவிஞர் வாலியிடம் போனில் நக்கலாகப் பேச, கோபம் அடைந்த கவிஞர் வாலி, “போனை கீழே வைடா.. அடிச்சு ஒதச்சிடுவேன்” என்று பேசியுள்ளார். கவிஞர் வாலி என்ன சூழலில் இப்படிப் பேசினார், இதற்கு எம்.ஜி.ஆர் என்ன எதிர்வினை ஆற்றினார் என்பதை இங்கே பார்க்கலாம்.
இந்ந சம்பவம் குறித்து ஒரு நேர்காணலில் கவிஞர் வாலி கூறுகையில், “எனது மனைவிக்கு பிரசவம், அறுவை சிகிச்சை நடக்கிறது; அப்போது சிவசாமி என்று ஒரு தயாரிப்பாளர் எம்.ஜி.ஆர் நடித்த அண்ணமிட்ட கைகள் படத்தின் தயாரிப்பாளர் அவர். அவர் எனக்கு போன் பண்ணி, இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் எல்லோரும் அமர்ந்திருக்கிறார்கள். நீங்கள் வந்தீர்கள் என்றால் இரவு பாட்டு எழுதி நாளைக்கு ரெக்கார்டு பண்ணி, நாளை மறுநாள் தேவிக்குளம், பீர்மேடு ஷூட்டிங் நீங்கள் வர வேண்டும் என்றார்.
நான் சொனேன், என்ன சார், என் மனைவிக்கு ஆபரேஷன் நடக்கப்போகிறது. நான் பதற்றத்தில் இருக்கிறேன், இப்போது பாட்டெல்லாம் எழுதுவதற்கு வாய்ப்பே கிடையாது. உங்களுக்கு ரொம்ப அவசரம்னா வேறு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள் என்று கூறினேன். அப்போது அவர், வாய் தவறி, “ஆபரேஷன் நீரா பண்ணப் போறீர்னு” கேட்டுவிட்டார். அது ரொம்ப நக்கலான கேள்வி, எனக்கு கோபம் வந்துவிட்டது.
“போனை கீழே வைடா, அடிச்சு ஒதச்சிடுவேன்னு” சொல்லிவிட்டேன்.
மறுநாள் எம்.ஜி.ஆர் எனக்கு போன் பண்ணி, பாட்டை நான் தள்ளி வச்சுக்கிறேன். உங்கள் கோபம் நியாயமானது என்று கூறினார். அப்புறம், ஆஸ்பத்திரிக்கு வந்து குழந்தை கையில் ஒரு பவுன் காசையும் கொடுத்து, பாட்டுக்கு அவசரமில்லை என்று 2 நாள் கழித்து என்னிடம் பாட்டை எழுதி வாங்கிக்கொண்டு போனார்.” என்று கவிஞர் வாலி கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர். கவிஞர் வாலியின் கோபத்தில் உள்ள நியாயத்தை புரிந்துகொண்டு, வாலியின் குழந்தைக்கு 1 பவுன் காசை கொடுத்து, 2 நாள் கழித்து பாடல் எழுதி வாங்கிச் சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆரின் பல வெற்றிப் பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. அதற்கு பிறகு, பல பாடல்களை எம்.ஜி.ஆர் படத்தில் எழுதியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“