/indian-express-tamil/media/media_files/5HOXiAcmHxBuYOgDeU7m.jpg)
கருணாநிதி வரிகளை பாட மறுத்த கே.பி சுந்தராம்பாள்; காரணம் என்ன? எந்தப் படம்? என்ன பாடல்? பின்னர் என்ன நடந்தது?
கலைஞர் கருணாநிதி திரைத்துறையில் உச்சத்தில் இருந்தப்போது, அவரது வரிகளை கே.பி சுந்தராம்பாள் பாட மறுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த சம்பவம் என்ன? அது என்ன பாடல் என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
இதுதொடர்பாக, தென்றல் தமிழ் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், பராசக்தி, மனோகரா என தனது கதை வசனத்தால் புகழின் உச்சத்தில் இருந்தவர் கருணாநிதி. இந்த நிலையில் பூம்புகார் படத்திற்கு கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதினார். இந்தப் படத்தில் கவுந்தி அடிகள் கதாப்பாத்திரத்தில் கே.பி சுந்தராம்பாள் நடித்தார். கே.பி சுந்தராம்பாள் தனது கணீர் குரலால் ரசிகர்களை கட்டிப் போட்டவர். கே.பி சுந்தராம்பாள் தன்னுடன் நாடகங்களில் நடித்த கிட்டப்பாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
கிட்டப்பா நாடகங்களில் கத்தி பேசி நடித்ததால் நுரையீரல் பாதிக்கப்பட்டு 27 வயதில் மரணம் அடைந்தார். இதனால் மனமுடைந்த சுந்தராம்பாள் இனி யாருடனும் ஜோடியாக நடிப்பதில்லை என முடிவெடுத்து வெள்ளைப் புடவை கட்டி, நெற்றியில் விபூதி பட்டை இட்டு, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து காணப்பட்டார்.
இந்தநிலையில் பூம்புகார் படத்தில் நடிக்க சுந்தராம்பாளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கே.பி.எஸ் நடிக்க மறுத்தார். சமணத் துறவி கதாப்பாத்திரம் என்றாலும், கருணாநிதி பகுத்தறிவு கருத்துக்களை புகுத்தி விடுவார் என நடிக்க மறுத்துள்ளார்.
ஒருவழியாக கே.பி.எஸ் நடிக்க படக்குழு சம்மதிக்க வைத்தது. ஆனால் கே.பி.எஸ் விபூதி பட்டையை அளிக்க மறுத்துள்ளார். உடனே படக்குழு கருப்பு வெள்ளை படம் என்பதால் சிறிய அளவில் விபூதி வைத்துக் கொள்ளுங்கள் சமாளித்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள். கே.பி.எஸ் ஒத்துக் கொண்டார்.
அடுத்ததாக கோவலன் கொல்லப்பட்ட உடன் கவுந்தி அடிகள் பாடுவதாக உள்ள பாடல். பாடலை எழுதியவர் கருணாநிதி. நீதியே நீயும் இருக்கின்றாயா எனத் தொடங்கும் பாடலில் அன்று கொல்லும் அரசனின் ஆணை வென்றுவிட்டது, நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்றுவிட்டது என வரிகள் வரும். இதனை பாட கே.பி.எஸ் மறுத்துள்ளார். தெய்வத்தின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் வரிகளை முருகன் பக்தையான கே.பி.எஸ் பாட மறுத்துள்ளார்.
இதனால், தமிழுக்காக கருணாநிதி வரிகளை மாற்றிவிட்டார். அன்று கொல்லும் அரசனின் ஆணை வென்றுவிட்டது, நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்துவிட்டது என்று வரிகள் மாற்றப்பட்டது. இதனையடுத்து கே.பி.எஸ் மகிழ்ச்சியுடன் பாடலை பாடி முடித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.