நடிகை கீர்த்தி சுரேஷ் 'பேபி ஜான்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான உற்சாகத்தில் இருக்கிறார். இத்திரைப்படம், கடந்த 2016-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவான 'தெறி' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இப்படத்தில் சமந்தா நடித்திருந்த பாத்திரத்தை, இந்தியில் கீர்த்தி சுரேஷ் ஏற்று நடித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில், சமந்தா தான் தன்னை 'பேபி ஜான்' திரைப்படத்திற்கு பரிந்துரைத்ததாக கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Keerthy Suresh reveals Samantha Ruth Prabhu recommended her for Baby John: ‘Honestly, I was very scared’
"இப்படத்திற்கான ரீமேக் பணிகளின் போதே, என்னை குறித்து சமந்தா கூறியதாக வருன் தவான் தெரிவித்தார். இதற்கு நான் என்றும் நன்றிக்கடன் பெற்றுள்ளேன். என்னால் இந்தப் பாத்திரத்தை செய்ய முடியும் என சமந்தா கூறியுள்ளார். தமிழில் சமந்தா நடித்ததில் 'தெறி' எனக்கு மிகவும் பிடித்தமான படம். இதன் ரீமேக்கில் நடிப்பதற்கு முதலில் எனக்கு பயமாக இருந்தது" என கலாட்டா இந்தியாவிற்கு அளித்த நேர்காணலில் கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
முன்னதாக, கீர்த்தி சுரேஷும், சமந்தாவும் இணைந்து 'மஹாநடி' என்ற தெலுங்கு திடைப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம், மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.