நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘சாமி 2’. இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் பாடகியாக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
நவீன உலகின் நடிகையர் திலகம் என புகழ்பெற்ற கீர்த்தி சுரேஷ்:
தமிழ் சினிமாவிற்குள் மாயாவாக ‘இது என்ன மாயம்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். முதல் இரண்டு படங்கள் இவருக்குத் தமிழ் மக்களிடையே அறிமுகத்தை மட்டும் அளித்திருந்தாலும், நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ‘ரஜினி முருகன்’, ‘ரெமோ’ ஆகிய படங்கள் மூலம் இளைஞர்கள் மனதை தன் வசமாக்கிக் கொண்டார். பின்னர் தனுஷ், இளைய தளபதி விஜய் மற்றும் சூர்யா ஆகியோரின் ஜோடியாக நடித்தார். விரல் விட்டு எண்ணும் அளவிற்கே தமிழ் படங்களை இவர் நடித்திருந்தாலும், ‘நடிகையர் திலகம்’ படத்தின் மூலம் எண்ணற்ற புகழை எட்டினார். பழங்காலத்து நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சாவித்திரியாக வாழ்ந்துள்ளார்.
சாமி 2 படத்தில் பாடகராக அறிமுகமான கீர்த்தி சுரேஷ்:
நடிகையர் திலகம் படத்தை பார்த்த மக்கள் அனைவரும் இவரைச் சாவித்திரியின் மறு பிறவி என்றே போற்றி வருகின்றனர். அதற்கு முழு காரணம் ‘நடிகையர் திலகம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் எடுத்த முயற்சி தான். இதைத் தொடர்ந்து இவருக்குப் பட வாய்ப்புகள் அதிகமாக தேடி வருகிறது. தற்போது நடிகர் விக்ரம் ஜோடியாக ‘சாமி 2’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் ‘சாமி 2’ படத்திற்காக பாடகியாக புதிய அவதாரம் எடுத்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் கீர்த்தி சுரேஷ் பாடிய முதல் பாடல் இது.
Excited and happy to share with you all my first song as a singer from #SaamySquare ???? hope u will like it and looking forward to the feedback’s !! https://t.co/l9FrB8lfKD #ChiyaanVikram #PudhuMetroRail @shibuthameens @ThisIsDSP @SonyMusicSouth
— Keerthy Suresh (@KeerthyOfficial) 24 July 2018
நடிகர் விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து இந்தப் படத்தில் ‘புது மெட்ரோ ரெயில்’ பாடலைப் பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் வீடியோவை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். இந்த வீடியோவை, இதுவரை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். டுவிட்டரிலும் இது டாப் டிரெண்டிங்கில் உள்ளது.
நடிகையர் திலகம் படத்தைப் பார்த்து கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வியந்த மக்கள் தற்போது அவரின் பாடல் திறமையைக் கண்டும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.