பாபு:
கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் அனைத்துத்துறைளையும் போல சினிமாத்துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கடந்த 23 ஆம் தேதி திரையுலகைச் சேர்ந்த அனைத்துச் சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்ட கூட்டத்தில் நஷ்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. படங்களை எந்த வரிசையில் வெளியிடுவது என்று பரிசீலனை செய்யப்பட்டது.
கேரளாவில் பெய்த கனமழையில் பல திரையரங்குகள் வெள்ளத்தில் மூழ்கின. நான்கு திரையரங்குகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டதாக அறிவித்திருக்கிறார்கள். அந்தத் திரையரங்குகள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன. பகுதி சேதம் அடைந்த திரையரங்குகள் ஏராளம். திரையரங்ககளுக்கு ஏற்பட்ட சேதம் மட்டும் 30 கோடிகள் இருக்கும் என ஃபிலிம் சேம்பரின் பொதுச்செலாளர் வி.சி.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் 2, டொவினோ தாமஸின் மாரடோனா போன்ற படங்கள் ஓடிக்கொண்டிருந்த நிலையில் மழையால் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் இந்தப் படங்களை வாங்கியவர்கள், திரையிட்டவர்கள் என அனைத்துத் தரப்பினரும் நஷ்டத்தை சந்தித்தனர். ஆகஸ்டில் ஓணத்தை முன்னிட்டு மம்முட்டி, பிருத்விராஜ், பகத் பாசில், நிவின் பாலி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவதாக இருந்து, தள்ளி வைக்கப்பட்டன. இவை மலையாள சினிமாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த வருடம் தமிழ் திரையுலகில் நடந்த வேலைநிறுத்தத்துக்குப் பிறகு படங்களின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்யும் என அறிவித்து அதன்படியே செயல்பட்டு வருகின்றனர். மலையாள சினிமாவிலும் அந்தமுறையை கடைபிடிக்கின்றனர். முதலில் எந்தெந்த படங்ள் வெளியாகும் என்பதை அறிவித்திருக்கிறார்கள்.
மலையாள சினிமா:
செப்டம்பர் 6
செப்டம்பர் 6 ஆம் தேதி பிருத்விராஜ், இஷா தல்வார் நடித்த ரணம் வெளியாகிறது. நிர்மல் சகதேவ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
செப்டம்பர் 7
7 ஆம் தேதி டொவினோ தாமஸ் நடித்துள்ள தீவண்டி படமும், ஆசிப் அலி நடித்துள்ள மந்தாரம் படங்களும் வெளியாகின்றன.
செப்டம்பர் 14
14 ஆம் தேதி மம்முட்டி நடித்துள்ள குட்டநாடன் பிலாக் வெளியாகிறது. ஓணத்துக்கு வெளியாவதாக இருந்த படம் இது. கதாசிஷாயர் சேது இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதனுடன் வெளியாகும் மற்றெnரு படம் படையோட்டம். பிஜு மேனன் நடித்துள்ள காமெடி கேங்ஸ்டர் படம் இது.
செப்டம்பர் 20
20 ஆம் தேதி மாங்கல்யம் தந்துனானே, வரதன் ஆகிய படங்கள் வெளியாகின்றன. வரதன் பகத் பாசில் நடித்த படம். ஓணத்துக்கு வெளியாக வேண்டியது. அமல் நீரத் படத்தை இயக்கியுள்ளார்.
செப்டம்பர் 28
செப்டம்பர் 28 சாலக்குடிக்காரன் சங்காதி படம் வெளியாகிறது. சாலக்குடியைச் சேர்ந்த நண்பன் என்பது பொருள். மறைந்த கலாபவன் மணியின் ஊர் சாலக்குடி. அவரது வாழ்க்கை வரலாறைச் சொல்லும் படம் இது. கேரள வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது சாலக்குடி. ஓணத்துக்கு வெளியாக வேண்டிய படம் செப்டம்பர் 14 வெளியானாலும் கூட்டம் வருமா என்பது சந்தேகமே.
அக்டோபர் 5
அக்டோபர் 5 குஞ்சாகாபோபனின் ஜானி ஜானி எஸ் அப்பா வெளியாகிறது. பாவாட படத்தை இயக்கிய மார்த்தாண்டன் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து படத்தை எடுத்துள்ளார்.
அக்டோபர் 14
அக்டோபர் 14 மலையாளிகள் அதிகம் எதிர்பார்க்கும் காயங்குளம் கொச்சுண்ணி வெளியாகிறது. சரித்திரப் படம். மிகுந்த பொருள்செலவு. ஓணத்துக்கு வெளியிட்டால் நல்ல ஓபனிங் கிடைக்கும் என நினைத்தனர். வெள்ளம் அனைத்தையும் அடித்துச் சென்றுவிட்டது. ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் மோகன்லால்.
படங்களுக்கான ரிலீஸ் அட்டவணை தயாரிப்பதல்ல சவால். வீடு உள்பட அனைத்தையும் இழந்த மக்கள் திரையரங்குககளுக்கு உடனடியாக வருவார்களா என்பதே கேள்வி. திரைப்படம் பொழுதுப்போக்குதானே தவிர அத்தியாவசியம் அல்ல. எர்ணாகுளம் போன்ற சில நகரங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு வழக்கம் போல் மக்கள் கூட்டம் வருகிறது. ஆனால், மாநிலம் முழுவதிலும் இருக்கிற 160 சென்டர்களில் (திரையரங்குள் அல்ல) சுமார் 70 சென்டர்கள் மட்டுமே நகரங்களில் உள்ளன. மீதி கிராமப்புறங்களில். அங்கு உடனடியாக மக்கள் திரையரங்குக்கு வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது.
திரையரங்குகளுக்கு ஏற்பட்ட சேதம், வெளியான படங்களை வெள்ளத்தை முன்னிட்டு உடனடியாக நிறுத்தியது, ஓணம் படங்கள் தள்ளிப் போனது, படப்பிடிப்புகளுக்கு ஏற்பட்ட தடங்கல் என சுமார் 450 கோடிகள் மலையாள சினிமாவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் என கணித்திருக்கிறார்கள்.
இந்த நஷ்டங்களுடன், திரையரங்குகளுக்கு மக்கள் முன்புபோல் வருவார்களா என்ற சந்தேகமும் இணைந்துள்ள குழப்பமான சூழலில் புதுப்படங்களை வெளியிட மலையாள சினிமா தயாராகி வருகிறது.
சினிமா என்ற மக்களின் கலை அவர்களை காப்பாற்றும்.