/indian-express-tamil/media/media_files/2025/10/08/lakshmi-2025-10-08-17-48-24.jpg)
தமிழ் சினிமாவில் அறிமுகமான சில படங்களிலேயே கிராமத்து கதாநாயகி, துறுதுறுப்பான பெண் என பல பரிமாணங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை லட்சுமி மேனன். தனது இயல்பான நடிப்பால் பல வெற்றிப் படங்களில் நடித்தார். கேரளாவைச் சேர்ந்த லட்சுமி மேனன், 2011ஆம் ஆண்டு மலையாளத்தில் வினயன் இயக்கிய 'ரகுவிண்டெ சுவந்தம் ரசியா' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து, கடந்த 2012-ல் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான 'கும்கி' திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தக் கிராமத்து காதல் கதை அவருக்கு மிகப்பெரிய வெற்றியையும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரவலான அறிமுகத்தையும் பெற்றுத் தந்தது. இப்படத்தில் அவரது கதாநாயகி கதாபாத்திரம், கிராமத்து வாசிகளைப் போன்ற தோற்றத்துடன், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வெகுவாகப் பேசப்பட்டது.
'கும்கி' வெற்றிக்கு பிறகு, லட்சுமி மேனன் தமிழில் பிஸியான நடிகையாக மாறினார். அதே ஆண்டில், சசிகுமாருடன் இணைந்து நடித்த 'சுந்தரபாண்டியன்' திரைப்படத்தில் அவரது துணிச்சலான நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து, 'குட்டிப்புலி', 'பாண்டிய நாடு' போன்ற படங்களும் வெற்றி பெற்றன. 2014-ஆம் ஆண்டு வெளியான 'ஜிகர்தண்டா' திரைப்படம், லட்சுமி மேனனின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான படமாக அமைந்தது.
அண்மையில், கொச்சியில் மதுபான பாரில் லட்சுமி மேனன் தரப்பிற்கும் ஐ.டி.ஊழியர் தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த லட்சுமி மேனன் தரப்பினர் ஐ.டி.ஊழியரை காரில் கடத்தி சென்று தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில், ஐ.டி. ஊழியரைக் கடத்தியதாகக் கூறப்படும் மிதுன், அனீஷ், சோனா மோல் ஆகியோரை காவல்துறை ஏற்கெனவே கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக நடிகை லட்சுமி மேனனிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்திருந்தது. ஆனால், இந்தத் தகவல் அறிந்ததும் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாகிவிட்டதாகத் கூறப்பட்டது. தொடர்ந்து, செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், நடிகை லட்சுமி மேனனுக்கு கேரள உயர் நீதிமன்றம் தற்போது முன்ஜாமீன் வழங்கியுள்ளது. தங்களுக்கு இடையே சுமூகமான தீர்வு ஏற்பட்டதாக ஐ.டி. ஊழியர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தையடுத்து இந்த முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.