பெரும் எதிர்ப்புக்கு இடையே வெளியான தி கேரளா ஸ்டோரி படம் பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் வசூலை முந்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் இயக்குநர் சுதிப்தோ சென்னின் இயக்கத்தில் தயாரான படம் தி கேரளா ஸ்டோரி. கேரளாவில் உள்ள இந்து பெண்கள் முஸ்லீம் இளைஞர்களால் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படம் உண்மை சம்பத்தை அடிப்படையாக கொண்டது என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதனால் படத்திற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநிதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த படத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், கடந்த மே 5-ந் தேதி தி கேரளா ஸ்டோரி படம் இந்தியா முழுவதும் வெளியானது.
படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் இருந்தாலும், வசூலில் பாதிப்பு இல்லை என்று சொல்லும் அளவுக்கு பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்கள் படங்களில் வசூலை தி கேரளா ஸ்டோரி முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தின் வசூலை முந்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க்கின் அறிவிப்பின்படி தி கேரளா ஸ்டோரி படம் இந்திய அளவில் ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபிஸ் ரூ. 68.86 கோடியாக உள்ளது.
இதன் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் பாலிவுட் சினிமாவில் வெளியான அமீர் கானின் லால் சிங் சத்தா, அக்ஷய் குமாரின் செல்ஃபி, கார்த்திக் ஆரியனின் ஷெஹ்சாதா உட்பட பெரும்பாலான பெரிய படங்களை தி கேரளா ஸ்டோரி பின்னுக்குத் தள்ளியுள்ளது. தற்போது சமீபத்தில் வெளியான அஜய் தேவ்கனின் போலா (கைதி ரீமேக் மொத்த வசூல் 90 கோடி) படத்தை மிஞ்சும் வகையில் வசூலில் முன்னேறி வருகிறது, மேலும் இந்தி மார்க்கெட்டில் பொன்னியின் செல்வன் 2 (21 கோடி ரூபாய்) படத்தை விட தி கேரளா ஸ்டோரி படம் மூன்று மடங்கு அதிகமாக வசூலித்துள்ளது.
கடந்த ஆண்டு வெளியான சர்ச்சைக்குரிய திரைப்படமான தி காஷ்மீர் ஃபைல்ஸைப் போலவே தி கேரளா ஸ்டோரி படமும் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது, இரண்டு படங்களும் ஆளும் பாஜக அரசாங்கத்தின் ஆதரவை பெற்றுள்ளது. இதனிடையே தி கேரளா ஸ்டோரி படம் குறித்து பேசிய பிரதமர் மோடி “நாட்டின் அழகான மாநிலம, மக்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் திறமையானவர்கள்.
ஆனால் தி கேரளா ஸ்டோரி படம் அந்த மாநிலத்தில் நடக்கும் பயங்கரவாதச் சதிகளை வெளிக்கொண்டுவருகிறது” என்று கடந்த வாரம் கர்நாடகாவில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி கூறியிருந்தார். உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“