கேரளா மாநிலத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் வைத்துள்ள கோரிக்கைகளை ஏற்று அம்மாநிலத்தில் தமிழ்த் திரைப்படங்களுக்கு புதிய கட்டுபாடு விதிக்கப்பட உள்ளது.
தமிழ்ப்படங்கள் என்றாலே தமிழகத்தில் மட்டும் தான் அதிகம் மவுசு என்பது கடந்து, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரேட் ஏறி வருகிறது. குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே உலகம் முழுவதும் வசூல் மழை பொழிந்து வருகிறது. அதிலும், ரஜினி, விஜய் மற்றும் அஜித் படம் என்றாலே வேற லெவல் வரவேற்பு தான்.
கேரளா மாநிலத்தில் தமிழ்த் திரைப்படங்களுக்கு கட்டுப்பாடு
அந்த வகையில், பிற மாநிலங்களில் தமிழ்ப் படங்கள் வெளியாகும்போது அம்மாநில மொழிகளின் படத்தின் வசூல் பாதிக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் புகார் கூறி வந்தனர். சமீபத்தில் பேட்ட படத்தின் வெளியீட்டின்போதே ஆந்திராவில் என்.டி.ஆர் வாழ்க்கை வரலாறு படமும் வெளியாக இருந்ததால், அப்படத்தின் வசூல் பாதிக்காமல் இருக்க, பேட்ட படத்திற்கு குறைந்த திரையரங்குகளே ஒதுக்கப்பட்டது.
அதே முயற்சியை தான் தற்போது கேரளாவும் கையில் எடுக்க உள்ளது. கேரளாவில் வெளியாகும் தமிழ்ப்படங்களால் மலையாள படங்களின் வசூல் பெரிதும் பாதிக்கப்படுவதாக கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும், மலையாளப் படங்களின் வசூல் பாதிக்காமல் இருக்க தமிழ் திரைப்படங்களுக்கு திரையரங்குகளை குறைவாக ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்ற, கேரள திரையரங்கு விநியோகிஸ்தர்கள் சங்கம் ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளனர். அந்த திட்டத்தின் அடிப்படையில், முன்னணி நடிகரின் ஒரு தமிழ்ப் படத்திற்கு 125 தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என்றும் மலையாளப் படங்களுக்கு 160 முதல் 170 தியேட்டர்கள் வரை ஒதுக்கவும் முடிவெடுத்துள்ளனர்.
மலையாளத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்திற்கு இந்த விதிவிலக்கு இல்லாமல், அதிகமான தியேட்டர்கள் ஒதுக்கும் முறையை அமல்படுத்த இருக்கின்றனர்.