Khushbu Sundar Quits Twitter: ட்விட்டரில் மிகவும் சுறுசுறுப்பான பிரபலங்களில் ஒருவராக இருந்தவர் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தர். சோனியா காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் அவர், நாட்டின் தற்போதைய அரசியல் குறித்த தனது கருத்துக்களை தவறாமல் ட்விட்டரில் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் குஷ்பு நேற்று ட்விட்டரில் இருந்து விலகியுள்ளார், 'அதிக நெகட்டிவிட்டி’ தான் இதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "ட்விட்டரில் அதிக எதிர்மறை விஷயங்கள் இருக்கின்றன. யாராக நான் இல்லையோ அப்படி நான் மாறிக்கொண்டிருந்தேன். எனது நல்லறிவை அப்படியே வைத்திருக்க நான் வெளியேற வேண்டியிருந்தது. ட்ரோல்களின் காரணமாக விலகும் நபர் நான் அல்ல. என்னைப் பொறுத்தவரை, நான் நானாக இருப்பது முக்கியம்” என ட்விட்டரிலிருந்து விலகுவதற்கான காரணத்தைக் குறிப்பிட்டிருந்தார் குஷ்பு.
மேலும் தொடர்ந்த அவர், “நான் தொடர்ந்து பேட்டிகள் அளித்து வருகிறேன். பத்திரிகையாளர்களிடம் அவ்வப்போது பேசிக் கொண்டிருக்கிறேன். இதன்மூலம் மக்களிடம் என்னுடைய கருத்துகளை கொண்டு செல்ல முடியும். சமூக வலைத்தளங்கள் கட்டாயம் தேவை என்ற அவசியம் இல்லை. இன்ஸ்டாகிராமில் இதுவரை எதிர்மறையான விஷயங்களை பார்க்கவில்லை. அதில் நான் தொடர்ந்து பயணிப்பேன். ஒழுங்குமுறை நிச்சயமாக கொண்டுவரப்பட வேண்டும். ஜனநாயகம் இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். என்னை துஷ்பிரயோகம் செய்ய உங்கள் ஜனநாயக சக்திகளைப் பயன்படுத்தினால், அதைச் செய்ய எனக்கும் அதே அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்” என்றார்.