/indian-express-tamil/media/media_files/2025/07/24/kk-vadivelu-2025-07-24-15-01-56.jpg)
தனது மகள் திருமணத்தை 'கிங்காங்' சங்கர் பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த சூழலில் தனது மகளின் திருமணத்திற்கு நடிகர் வடிவேலு வர முடியாத காரணத்தை, 'கிங்காங்' சங்கர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக 'கிங்காங்' சங்கர் விளங்குகிறார். பெரும்பாலும் அனைத்து நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த பெருமை 'கிங்காங்' சங்கருக்கு இருக்கிறது. அந்த வகையில், பலருக்கு நேரில் சென்று தனது மகளின் திருமண அழைப்பிதழை கொடுத்து, அவர்களின் ஆசீர்வாதத்தை 'கிங்காங்' சங்கர் பெற்றார்.
இந்நிலையில், அது தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் அனைத்தும் கடந்த ஒரு மாதமாக ட்ரெண்டானது. இதற்காக பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். எனினும், இதற்கு சிலர் விமர்சனங்களையும் முன்வைத்தனர். இந்த விமர்சனங்கள் ஒருகட்டத்தில் ட்ரோல்களாகவும், தனி மனித தாக்குதலாகவும் மாறியது. ஆனால், தமிழில் ரஜினிகாந்த் முதல் பாலிவுட்டில் ஷாருக்கான் வரை அனைத்து நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த ஒரு முன்னணி நடிகர், நிச்சயம் இவ்வளவு பேருக்கு பத்திரிகை வைக்க வேண்டும் என்று பலர் ஆதரவு குரல்களையும் வெளிப்படுத்தினர்.
அதன்படி, தனது மகள் திருமணத்தில் நடிகர் வடிவேலு கலந்து கொள்ள முடியாத காரணத்தை, சினி உலகம் யூடியூப் சேனலுடனான நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில், "என்னுடைய மகளின் திருமணத்திற்காக பலருக்கு நேரில் சென்று பத்திரிகை கொடுத்தேன். என்னால் செல்ல முடியாத இடங்களுக்கு, என்னுடைய நண்பர்கள் சென்று பத்திரிகை கொடுத்து உதவி செய்தார்கள். பத்திரிகை இல்லாமலும் பல பேர் திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்திச் சென்றனர். மேலும், நடிகர் வடிவேலுவின் அலுவலகத்திற்கு மூன்று முறை சென்றேன். அப்போது, அவரை பார்க்க முடியவில்லை. இதனால் அங்கிருந்த மனேஜர், மேக்கப் மேன் ஆகியோருக்கு பத்திரிகை கொடுத்தேன். அதன் பின்னர், தொலைபேசி வாயிலாக வடிவேலு என்னுடன் பேசினார்.
தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு சென்றதாலும், பிரபுதேவாவுடன் இணைந்து பணியாற்றும் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருப்பதாலும், திருமணத்திற்கு நேரில் வர முடியவில்லை என்று வடிவேலு கூறினார். மேலும், நிச்சயமாக மணமக்களை நேரில் வந்து சந்திப்பதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார். அவர் இப்போது அழைத்தால் கூட, மாப்பிள்ளை மற்றும் பெண்ணை அழைத்துச் சென்று ஆசீர்வாதம் வாங்க தயாராக இருக்கிறேன். என்னுடன் தொலைபேசியில் வடிவேலு பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" என 'கிங்காங்' சங்கர் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.