Kolaigaran Tamil Movie Review: ரசிகர்கள் இன்றைக்குப் பார்த்தாலும் மகிழ்ச்சியடையக் கூடிய ’லீலை’ படத்திற்குப் பிறகு இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கும் திரைப்படம் கொலைகாரன்.
விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஆஷிமா நார்வால், நாசர், சீதா, பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
ஜப்பானிய எழுத்தளரான கெய்கோ ஹிகஷினோ எழுதி 2005ல் வெளியான The Devotion of Suspect X நாவல் மிகப் புகழ்பெற்ற ஒரு த்ரில்லர். இந்தக் கதையை மையப்படுத்தி Suspect X என்ற படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது The Devotion of Suspect X நாவலை தழுவி கொலைகாரன் படம் உருவாக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்து விட்டார் ஆண்ட்ரூ லூயிஸ்.
கட்டுமானத் துறையில் பணி புரிகிறார் விஜய் ஆண்டனி. அவரின் எதிர் வீட்டுப் பெண் தான் ஆஷிமா. ஒவ்வொரு நாளும் வேலைக்குக் கிளம்பும் போதும் இருவரும் சந்திக்கிறார்கள்.
இந்நிலையில் ஆஷிமாவை சந்திக்க வரும் ஆந்திர அமைச்சரின் சகோதரர் கொல்லப்படுகிறார். இது குறித்து விசாரிக்கும் போலீஸ் அதிகாரி அர்ஜூனின் சந்தேக வளையத்துக்குள் ஆஷிமாவும் அவரது தாய் சீதாவும் வருகிறார்கள். பின்னர் அந்த வளையம் விஜய் ஆண்டனி மீதும் படர்கிறது.
நடந்தது என்ன? யார் கொலையாளி? இந்த வழக்கிற்கும் விஜய் ஆண்டனிக்கும் என்ன சம்பந்தம் என்பதை விறு விறு திரைக்கதையுடன் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
விஜய் ஆண்டனியின் படங்களில் உளவியல் மேலோங்கி இருக்கும். இந்தப் படத்திலும் அது தொடர்கிறது. இறுக்கமான முகத்துடன் பிரபாகர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் உணர்வு ரீதியாக எப்படியெல்லாம் பாதிக்கப்படுவாள் என்பதை நேர்த்தியாக தனது நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார் ஆஷிமா.
போலீஸ் அதிகாரியாக வரும் அர்ஜூன் அனைத்து ஃப்ரேம்களிலும் அப்ளாஸ் அள்ளுகிறார்.
நாசர், சீதா, பகவதி பெருமாள் கொலைகாரனுக்கு வலு சேர்க்கிறார்கள். முகேஷின் ஒளிப்பதிவு பாராட்டும் ரகம். சைமனின் பின்னணி இசை, த்ரில்லர் கதையான கொலைகாரனுக்கு உதவி புரிந்திருக்கிறது. ஆனால் அந்த டூயட் பாடல்களை தவிர்த்திருந்தால் படம் இன்னும் ‘ஷார்ப்பாக’ இருந்திருக்கும்.
எதிர்பாராத சுவாரஸ்யங்களுடன், ஆங்காங்கே சில சினிமா தனங்களை தவிர்த்து விட்டுப் பார்த்தால், நன்றாகவே பயமுறுத்துவான் ’கொலைகாரன்’!