தமிழ் சினிமாவிற்கு பல ஈடுஇணையற்ற நடிகர்களை உருவாக்கித் தந்த கூத்துப்பட்டறை ந.முத்துச்சாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் புஞ்சை எனும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ந.முத்துச்சாமி. இவர் நாடகக்கலையின் மீதும் நடிப்புக்கலையின் மீதும் கொண்ட ஆர்வத்தால் 'கூத்துப்பட்டறை' எனும் அமைப்பைத் தொடங்கினார். இந்த கூத்துப்பட்டறையில் பயின்று தான் நாசர், விஜய் சேதுபதி, தலைவாசல் விஜய், சண்முகராஜன், குரு சோமசுந்தரம், விமல், விதார்த், பசுபதி என பல முன்னணி நடிகர்கள் இன்று சினிமாவில் சாதித்துள்ளனர்.
மிக இயல்பாக நடிப்பை வெளிப்படுத்துவது எப்படி என்பதே ந.முத்துச்சாமி தனது மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்த மிகச்சிறந்த பாடம். ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரத்திற்கு தகுந்த மாதிரி நடிப்பை வெளிப்படுத்துவதில் பெயர் போனவர்கள் இவரது மாணவர்கள்.
கூத்துப்பட்டறையில் அக்கவுண்டண்டாக இருந்த விஜய்சேதுபதியை நடிகராக்கிய பெருமைக்குரியவர் முத்துச்சாமி. 'ஆண்டவன் கட்டளை' படத்தில் நாசர் நடித்திருந்தது முத்துச்சாமி கதாபாத்திரத்தில் தான். தன்னால் ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரங்களில் வித்தியாசம் காட்ட முடிவது முத்துச்சாமியின் கூத்துப்பட்டறைப் பயிற்சியால் தான் என்பதை பலமுறை விஜய் சேதுபதியே சொல்லி இருக்கிறார்.
இதேபோல், 'ஜோக்கர்' பட நாயகன் குரு சோமசுந்தரமும் கூத்துப்பட்டறை மாணவர் தான். கூத்துப்பட்டறையில் 9 வருடம் இருந்த இவர், பல நடிகர்களுக்கு நடிப்பும் சொல்லிக் கொடுத்தவர். அவர்களில் முக்கியமானவர் வில்லன் மற்றும் கதாநாயகன் என எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் ஸ்கோர் செய்யும் பாபி சிம்ஹா.
இவ்வாறு கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்று சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். கலைக்கு பெருமையும் புகழையும் சேர்த்த முத்துச்சாமி, பத்மஸ்ரீ முதலான விருதுகளைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.