இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன், சிறந்த நடிகர்களில் ஒருவர் தனுஷ். இருவரும் திரையுலகுக்கு அறிமுகமான படம் தான் 'துள்ளுவதோ இளமை'. 2002ஆம் ஆண்டு வெளியான இப்படம், அப்போது மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அந்தப் படத்தில் அறிமுகமான அனைவருக்கும் நல்ல வாய்ப்புகளையும், ரசிகர்களிடையே ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்தி வைத்தது.
அந்தப் படத்தில் தனுஷின் நண்பராக அபிநய் நடித்திருந்தார். சினிமாவுக்கேற்ற முகவடிவம், திறமை, மென்மையான தோற்றம் என எல்லா பண்புகளும் அவருக்கு இருந்தன. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அந்தப் படம் வெளியான போது பலரும் தனுஷின் தோற்றத்தைக் குறித்து விமர்சித்து வந்தனர். அந்த நேரத்தில் பலர் வெளிப்படையாகவே “அபிநய்தான் ஹீரோ மாதிரி இருக்கிறார்” என்று கூறி வந்தனர்.
'துள்ளுவதோ இளமை' படத்துக்கு பிறகு, அபிநய் 'சக்சஸ்', 'தாஸ்', 'தொடக்கம்', 'சொல்ல சொல்ல இனிக்கும்' போன்ற பல படங்களில் நடித்தார். ஆனால் எவ்வளவு படங்களில் நடித்தாலும், அவருக்கு கணிசமான முன்னேற்றமோ பெரிய வாய்ப்புகளோ கிடைக்கவில்லை.தமிழ் திரைப்படங்களுக்கு அப்பாற்பட்டும், சில மலையாள படங்களிலும் அவர் நடித்து இருந்தாலும், ஒரு கட்டத்துக்குப் பிறகு அவருக்கான வாய்ப்புகள் குறைந்து, அவர் சினிமாவை விட்டு வியாக ஆரமித்தார்.
சினிமாவை முழுமையாக விட்டு விலகிய பிறகு, தனது உயிர்வாழ்வுக்காக அபிநய் சில வேலைகளை செய்து வந்தார். இப்படியான சூழ்நிலையில்தான் அவருக்கு 'லிவர் சிரோசிஸ்' என்ற கல்லீரல் தொடர்பான கடுமையான நோய் ஏற்பட்டது. அந்த நோயில் இருந்து மீள அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக அவருக்கு 28 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இதற்காக திரைத்துறை நண்பர்களிடம் உதவிக் கோரி அவர் உருக்கமான முறையில் கேட்டிருந்தார். அந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில் இவருக்கு கலக்கப்போவது யாரு பாலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி கொடுத்திருக்கிறார். நேராக அபிநய்யின் வீட்டுக்கு சென்ற பாலா அவரை நலம் விசாரித்து, விரைவில் மீண்டுவிடுவீர்கள் என நம்பிக்கையளித்து இந்த தொகையை கொடுத்துள்ளார். அப்போது அபிநய்யோ பாலாவிடம், சீக்கிரம் போய்விடுவேன் என சொல்ல; அதெல்லாம் இல்லை, சீக்கிரம் நடிக்க வாங்க என்று ஊக்கமளித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த விடியோவை பார்த்த பலரும் தங்களின் ஆதரவை கமெண்ட் வழியாக தெரிவித்து வருகின்றனர். இது அவரது ரசிகர்களை கண் கலங்க வைக்கிறது. அதுமட்டுமின்றி தன்னுடன் அறிமுகமான நடிகருக்கு தனுஷ் உதவி செய்ய வேண்டுமென்ற ரசிகர்கள் கோரிக்கைகளும் வைக்க ஆரம்பித்திருக்கின்றன