உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் நடிகை; பெற்ற பிள்ளையால் கைவிடப்பட்ட அவலம்: மகனாக நின்று உதவிய பாலா!
பழம்பெரும் நடிகை பிந்து கோஷ் உடல் நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு நடிகர் பாலா நிதியுதவி அளித்துள்ளார். மேலும், அவரது மருத்துவ செலவுகளை தான் கவனித்துக் கொள்வதாக பாலா உறுதியளித்துள்ளார்.
உடல் நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பழம்பெரும் நடிகை பிந்து கோஷுக்கு, நடிகர் பாலா உதவி செய்துள்ள சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.
Advertisment
தமிழ் சினிமாவை பொறுத்தவரை நகைச்சுவை பாத்திரங்களை ஏற்று நடிகைகள் மிகக் குறைவு. அவர்களில் மிகவும் பிரபலமான நடிகையாக அறியப்படுபவர் பிந்து கோஷ். இவர் தன்னுடைய தனித்துவமான உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்புகள் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டு விளங்கினார். கவுண்டமணி, செந்தில் தொடங்கி ரஜினிகாந்த என பல முன்னணி நடிகர்களுடன் பிந்து கோஷ் நடித்துள்ளார்.
இந்நிலையில், அண்மை காலமாக கடுமையான உடல்நலக் குறைவால் பிந்து கோஷ் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் கலட்டா யூடியூப் சேனலுக்காக பிந்து கோஷை நேர்காணல் எடுக்க நடிகை ஷகீலா சென்றிருந்தார். அப்போது, தனது உடல் நல பாதிப்புகள் மற்றும் உறவினர்கள் தன்னை கைவிட்டது என பல தகவல்களை பிந்து கோஷ் பகிர்ந்து கொண்டார். தான் பெற்ற மகன் கூட தன்னை பராமரிக்கவில்லை என பிந்து கோஷ் வேதனையுடன் கூறியிருந்தார்.
இந்த சூழலில், நடிகை பிந்து கோஷுக்கு உதவி செய்ய யாரை அணுகலாம் என்று பார்வையாளர்களிடம் ஷகீலா கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, நடிகர் பாலாவை தொடர்பு கொள்ளலாம் என்று பலரும் கூறியதாக ஷகீலா தெரிவித்தார். அதன்படி, பிந்து கோஷின் நிலை குறித்து பாலாவிடம் தகவல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, படப்படிப்பு தளத்தில் இருந்து பிந்து கோஷின் இல்லத்திற்கு பாலா வருகை தந்தார்.
Advertisment
Advertisements
அப்போது, நடிகை ஷகீலாவும் அவருடன் வந்திருந்தார். அதன்பேரில், ரூ. 80 ஆயிரத்தை பிந்து கோஷிடம் வழங்கிய பாலா, அவரது மருத்துவ செலவுகளையும் தான் பார்த்துக் கொள்வதாக தெரிவித்தார். இதனால், பாலாவுக்கு நடிகை பிந்து கோஷ் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். இதேபோல், நடிகர் ரிச்சர்ட் மற்றும் ராமலிங்கம் போன்ற சிலரும் பணம் வழங்கி உதவி செய்ததாக ஷகீலா குறிப்பிட்டுள்ளார்.
பழம்பெரும் நடிகை ஒருவருக்கு அவர் பெற்ற மகன் முதல் திரைத்துறையினர் பலரும் உதவி செய்யாத நிலையில், நடிகர் பாலா உதவிக்கரம் நீட்டியிருப்பது பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ கலட்டா வாய்ஸ் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது.