தென்னிந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகையான கே.ஆர். விஜயா, தனது 60 ஆண்டு கால திரையுலகப் பயணத்தில் எண்ணிலடங்காத சாதனைகளை படைத்துள்ளார். இவ்வளவு ஆண்டுகள் சினிமா பயணத்தில், அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று கூறலாம். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பலருடனும் இணைந்து நடித்த அனுபவம் அவருக்கு இருக்கிறது.
Advertisment
இந்நிலையில், தனது கணவர் தனக்கு எந்த அளவிற்கு உறுதுணையாக இருந்தார் என்று பல விஷயங்களை மனம் திறந்து அவர் பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக இந்தியா க்ளிட்ஸ் தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனி விமானம் மூலம் படப்பிடிப்புகளுக்கு சென்ற அனுபவத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, "ஒரு முறை ஜெர்மனியில் 10 நாட்கள் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக என்னிடம் கேட்டனர். அப்போது, வெளிநாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அழைக்கின்றனர் என்று என்னுடைய கணவரிடம் கூறினேன்.
இதன் மூலம், நான் வெளிநாடு செல்ல விரும்பியதை என் கணவர் உணர்ந்து கொண்டார். அதனால், அவரே வெளிநாட்டிற்கு என்னை சுற்றுலாவிற்காக அழைத்துச் சென்றார். குறிப்பாக, லண்டன், பாரிஸ், ஹாங்காங், பேங்காக், ஜப்பான், சுவிட்ஸர்லாந்து, குவைத், துபாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்திருக்கிறேன்.
Advertisment
Advertisements
அனைத்து விதத்திலும் எனக்கு பாதுகாப்பாகவும், வழிகாட்டியாகவும் எனது கணவர் விளங்கினார். தொழில்ரீதியாக எனக்கு வழிகாட்டினார். பல விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தது என்னுடைய கணவர் தான். கணவர் என்பதையும் கடந்து ஒரு ஆசிரியராகவும் எனக்கு இருந்தார்.
எனது கணவர் ஒரு தனி விமானம் வைத்திருந்தார். அதில், மும்பை, திருச்சி, மதுரை, கொச்சின், மங்களூர், பேங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு சென்றிருக்கிறேன். பல சமயங்களில் படப்பிடிப்பு தளங்களுக்கும் அந்த விமானத்தில் சென்றுள்ளேன். குறிப்பாக, 'இரு மலர்கள்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்த போது, அந்த விமானத்தில் தான் சென்றேன்" என்று நடிகை கே.ஆர். விஜயா தெரிவித்துள்ளார். இதன் மூலம் தனி விமானம் வைத்திருந்த முதல் நடிகை கே.ஆர். விஜயா என்று நாம் அறிந்து கொள்ள முடிகிறது.