தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் கே.எஸ் ரவிக்குமார். ஒவ்வொரு இயக்குநருக்கும் தனித்துவமான படைப்புகள் இருக்கும். குடும்பங்கள் கொண்டாடும் படங்களை தந்தவர் கே.எஸ் ரவிக்குமார். படையப்பா, பஞ்சதந்திரம் போன்ற இவரின் படங்கள் இன்றவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
இவரின் பல படங்கள் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்துள்ளது. பாடல், இசை, வசனம் என அனைத்தும் ஹிட் ஆனது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை இயக்கி உள்ளார். அவரது படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பதை கே.எஸ் ரவிக்குமார் வழக்கமாக வைத்துள்ளார். படத்திற்கு ஏற்ப கிளைமாக்ஸ் காட்சியிலோ அல்லது தொடக்கத்திலே நடிப்பார். இதுவும் ரசிகர்களின் வரவேற்பு பெற்றது. தற்போது கே.எஸ் ரவிக்குமார் படங்களில் முழுநேரம் நடிக்கத் தொடங்கியுள்ளார். அண்மையில் இவர் நடித்த கூகுள் குட்டப்பா படம் வெளியானது.
இந்தநிலையில், கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து 2014ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘லிங்கா’. சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, சந்தானம், ராதாரவி, விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்தப்படம் தொடர்பாக கே.எஸ் ரவிக்குமார் அண்மையில் அளித்த பேட்டி சமூகவலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
கே.எஸ் ரவிக்குமார் அளித்த அந்தப் பேட்டியில், “லிங்கா படத்தின் சில காட்சிகள் நாங்கள் நினைத்த படி எடுக்கவில்லை. கிளைமாக்ஸ் காட்சி நாங்கள் நினைத்தது வேறு, படமாக்கப்பட்டது வேறு. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது சில காட்சிகளை பார்த்த ரஜினி அதில் மாற்றம் செய்ய சொன்னார். பலூன்
காட்சி எல்லாம் வைக்கவில்லை. பின்னர் வேறு வழியில்லாமல் மாற்றம் செய்யப்பட்டது. அந்த காட்சியும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை”என்று கூறியுள்ளார்.
இது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவரின் மற்றொரு வீடியோவும் பகிரப்படுகிறது. அந்த பேட்டியில் பேசும் கே.எஸ் ரவிக்குமார், தாம் தான் அந்த காட்சியை வைத்ததாக கூறுகிறார். இந்த இரண்டு வீடியோவும் பகிரப்பட்டு, நெட்டிசன்கள் பலரும் ‘இன்ன சார் இது’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.