ஒரே நாளில், இணையத்தில் ட்ரெண்டாகி நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற மோனலிசா என்ற பெண், தற்போது பாலிவுட் சினிமாவில் பட வாய்ப்பு பெற்றுள்ளதாகவும் பிரபல இயக்குனர் ஒருவர் அவருக்கு பட வாய்ப்பு தருவதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூகவலைதளங்களின் பயன்பாடு அதிகமாகவிட்ட இன்றைய காலக்கட்டத்தில், பொதுமக்கள் பலரும் தங்களை தாங்களே போட்டோ எடுத்து பதிவிட்டு வருவதோடு மட்டுமல்லாமல், வெளியில், வித்தியாசமான யாரை பார்த்தாலும், உடனடியாக போட்டோ அல்லது வீடியோ எடுத்து தங்களது சமூகவலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் ட்ரெண்டட் ஆனவர் தான் மோனலிசா.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் மோனலிசா போன்ஸ்லே(16). தனது தந்தையுடன் சேர்ந்து ருத்ராட்சம் விற்பனை செய்து வரும் இவர், கடந்த சில நாட்களாக, பிரயாக்ராஜ் பகுதியில், நடைபெற்று வரும் கும்பமேளா விழாவில், தனது பெற்றோருடன் சேர்ந்து ருத்ராட்சம் மாலை விற்பனை செய்து வந்துள்ளார். தனது அழகான கண்கள் மற்றும் சிரிப்பாமல் பலரின் மனத்தை கவர்ந்த மோனலிசாவை அங்கு வந்திருந்த பலரும் போட்டோ எடுத்துள்ளனர்.
இதில் அவரை வீடியோ எடுத்த ஒருவர், அதை தனது இன்ஸ்டாகிராம் பககத்தில் பதிவிட்டுள்ளார். அன்றில் இருந்து மோனலிசாவுடன் புகைப்படம் எடுக்க அவரை பலரும் பின் தொடர தொடங்கியுள்ளனர். மேலும் இவ்வளவு அழகாக இருக்கிறாரே இவர் ஏன் சினிமாவுக்கு போக கூடாது என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தற்போது மோனலிசாவை தேடி பாலிவுட் பட வாய்ப்பு வந்துள்ளது.
ராம் கி ஜென்மபூமி, தி டெய்ரி ஆஃப் வெஸ்ட் பெங்கால் ஆகிய படங்களை இயக்கிய சனோஜ் மிஸ்ரா தான் இயக்கும் அடுத்த படத்தில் மோனலிசா போன்ஸ்லேவுக்கு வாய்ப்பு கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோனலிசாவின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், பலரும் அவருடன் புகைப்படம் எடுக்க அவரை பின்தொடர்ந்தபோது, அவரது குடும்பத்தினர் இதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவரை பின் தொடரும் கூட்டத்தால், ருத்ராட்சம் மாலை விற்பனை பாதிக்கப்படுவதாக கூறி அவரது பெற்றோர் அவரை திருப்பி இந்தூருக்கே அனுப்பி வைத்துள்ளனர்.