நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் காளி வெங்கட், சந்தோஷ் வேல்முருகன், பிரசன்னா பாலசந்தர் நடிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் "குரங்கு பெடல்" படத்தின் விமர்சனம்
கதைக்களம்
ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றங்கரை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் 1980களின் கோடைக் காலத்தில் நடப்பது போல கதை தொடங்குகிறது. அந்த கிராமத்தில் வசிக்கும் ஐந்து சிறுவர்கள் கோடை விடுமுறையில் சேர்ந்து சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். இதில் சிறுவயதில் இருந்தே சைக்கிள் ஓட்ட பயப்படுவதால் ஊர்க்காரர்களால் நடராஜா சர்விஸ் என கேலி செய்யப்படும் காளி வெங்கட்டின் மகன் மாரியப்பனும் ஒருவர்.
இந்த ஐந்து சிறுவர்களில் ஒரு சிறுவன் மட்டும் சைக்கிள் வாங்கிவிட, மாரியப்பனை தவிர மற்ற மூவரும் சைக்கிள் வாங்கிய சிறுவனுடன் சேர்ந்து கொள்கிறார்கள். எப்படியாவது மற்ற சிறுவர்களுக்கு முன்னாடி சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் வாடகை சைக்கிள் எடுத்து ஓட்ட பழகுகிறார் மாரியப்பன். இதன்பிறகு அடுத்தடுத்து நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளே இப்படத்தின் கதை
நடிப்பு
/indian-express-tamil/media/media_files/Jjk9cpNC2gujrp0OtbIn.jpg)
படத்தின் ஹீரோவான மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன் (மாரியப்பன்) தன்னுடைய இயல்பான, எதார்த்தமான நடிப்பால் நம் மனங்களை கொள்ளை கொள்கிறார். அவரின் குறும்புத்தனமும், வெகுளித்தனமும் ஒருபுறம் நம்மை ரசிக்க வைத்தாலும் மறுபுறம் எமோஷனல் காட்சிகளில் நம்மை கலங்க வைக்கிறார்.
இந்த சிறு வயதில் இக்கதையின் ஆழத்தையும், எதார்த்தத்தையும் உள்வாங்கி அக்கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கும் சந்தோஷ் வேல்முருகனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மற்ற சிறுவர்களின் குழந்தைத்தனமான நடிப்பும் நம்மை பெருமளவில் ஈர்க்கிறது.
காளி வெங்கட்டின் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறி கொன்டே செல்கிறது, கண்டிப்பான அப்பாவாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.‘நக்கலைட்ஸ்' டீமை சார்ந்த பிரசன்னா பாலசந்தர், ஜென்சன் திவாகர், செல்வா, சாவித்ரி ஆகியோரின் நடிப்பும் கவனம் பெற்றுள்ளது.
இயக்கம் மற்றும் இசை
இயக்குநரும் எழுத்தாளருமான ராசி. அழகப்பன் எழுதிய "சைக்கிள்" என்ற சிறுகதையை மையமாக வைத்து இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் கமலக்கண்ணன். கொங்கு தமிழ் முதல் தோல் பாவை கூத்து வரை நாம் மறந்த பல கலாச்சாரங்களை நமக்கு நினைவூட்டும் விதமாக படத்தில் பல காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. ஒளிப்பதிவாளர் சுமி.பாஸ்காரனின் ஒவ்வொரு காட்சியும் நம் குழந்தை பருவத்தை நமக்கு நினைவூட்டி கொன்டே இருக்கிறது.
ஜிப்ரானின் மென்மையான பின்னணி இசையும், அற்புதமான பாடல்களும் படத்திற்கு கூடுதல் பலம்
தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்
சினிமாவில் ஹீரோவாக நடித்தோமா, பணம் சம்பாதித்தோமா என்று இருக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் தன்னை போன்ற பல திறமையானவர்களுக்கு தொடர்ந்து தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் வாய்ப்பளிக்கும் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள். அவருடைய தயாரிப்பில் வெளிவந்த மற்றொரு சிறப்பான படம் குரங்கு பெடல்
படத்தை பற்றிய அலசல்
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குழைந்தைகள் மொபைல் போனிலேயே தங்களுடைய முழு நேரத்தையும் செலவிட்டு கொண்டிருக்கும் சூழலில் இப்படத்தில் காட்டப்பட்டிருப்பதை போல 80 காலகட்டங்களில் வாழ்ந்த குழந்தைகளின் உன்னதமாக, அழகான உலகத்தை பார்க்கும் போது குழந்தையாகவே நாம் இருந்திருக்கலாம் என்ற ஏக்கம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
சிறுவர்கள் பாப்பின்ஸ் கொடுத்து சண்டையை தீர்க்கும் காட்சியெல்லம் பார்க்கும்போது நம்முள் ஏதோ ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சைக்கிள் அக்காலகட்டத்தில் எவ்வளவு முக்கியமான பொருளாக இருந்திருக்கிறது என்பதை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் எந்த ஒரு இடத்திலும் தொய்வடையாமல் சுவாரஸ்யத்துடன் கதையை நகர்த்தி இருக்கிறார்கள். மாரியப்பனை தவிர மற்ற நான்கு சிறுவர்களின் Lip Sync ஒரு சில இடங்களில் ஒத்துப்போகவில்லை.
கத்தி, ரத்தம், துப்பாக்கி, வன்முறை, ஆபாசம் இவற்றை உள்ளடக்கிய படங்களே தமிழ் சினிமாவில் தற்போது வந்துகொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற மண் சார்ந்த, உறவுகள் சார்ந்த, குழந்தைகள் சார்ந்த படம் வந்திருப்பது மகிழ்ச்சி. மொத்தத்தில் படம் பார்க்கும் அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் தங்களுடைய இளமை கால அழகான தருணங்களை எண்ணிப் பார்க்க வைக்கும் ஒரு பீல் குட் படமாக முடிகிறது இந்த குரங்கு பெடல்
- நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“