Kutty Radhika Kumaraswamy: இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் ‘இயற்கை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை குட்டி ராதிகா. தாஸ்தோவெஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ நாவலை மையமாக வைத்து இயக்கப்பட்டிருந்த இந்தப் படத்தில் ஷாம் மற்றும் அருண் விஜய் என 2 ஹீரோக்கள் நடித்திருந்தார்கள்.
தமிழுக்கு வருவதற்கு முன்பே கன்னடப் படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து, பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார் ராதிகா. மேலும் பல நல்ல கதைகளில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், தவறான கதைத் தேர்வுகளால் ராதிகாவால் தொடர்ந்து ஜொலிக்க முடியவில்லை.
ராதிகாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, 2000-ல் அதாவது அவரின் 14 வயதிலேயே ரதன் குமார் என்பவரை மணம் முடித்திருந்தார். ராதிகாவின் திருமண செய்தி, அவரது ‘கரியரை பாதிக்கக்கூடும்’ என்பதால், மகள் ராதிகாவை அவரது தந்தை தேவராஜ் கடத்தியதாக 2002-ல் புகார் அளித்தார் ரதன் குமார். சில நாட்களுக்குப் பிறகு, ராதிகாவுக்கு வெறும் 14 வயது என்பதால் இந்தத் திருமணம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், ரதன்குமார் தன் மகளை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்டார் என்றும் ராதிகாவின் தாயார் கூறினார். அதோடு ராதிகாவை உயிரோடு எரிக்க ரதன் முயன்றதாகவும் தேவராஜ் குற்றம் சாட்டினார். இதற்கிடையே ஆகஸ்ட் 2002-ல் மாரடைப்பால் ரதன் குமார் இறந்தார்.
பின்னர், 2010 நவம்பரில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் ஹெ.டி.குமாரசாமியுடனான தனது திருமணம் குறித்த விஷயத்தை வெளியுலகுக்கு தெரியப்படுத்தினார் ராதிகா. தங்களின் திருமணம் 2006-ல் நடந்தது எனவும் அதில் ராதிகா குறிப்பிட்டிருந்தார். ராதிகா - குமாரசாமி தம்பதிக்கு ஷாமிகா என்ற மகளும் உள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் ராதிகா. இயக்குநர் நவரசன் இயக்கியுள்ள, ‘தமயந்தி’ என்ற ஹாரர் த்ரில்லர் படத்தில் தற்போது அவர் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது. அதோடு இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங்கும் செய்யப்படுகிறது.
இது குறித்து படத்தின் இயக்குநர் நவரசன், “அருந்ததி, பாகமதி ஆகிய படங்கள் போன்ற ஹாரர் த்ரில்லர் படம் தான் தமயந்தி. இதில் நடிக்க முதலில் அனுஷ்காவை தொடர்புகொண்டேன். அவருக்கு திரைக்கதை மிகவும் பிடித்திருந்தாலும் மற்ற படங்களில் ஒப்பந்தமாகியிருந்ததால் அவரால் நடிக்கமுடியவில்லை. எனது இரண்டாவது தேர்வு குட்டி ராதிகா. அவரும் இரண்டு கன்னடப் படங்களில் பிஸியாக இருந்தார். இருப்பினும் ஒருமுறை கதையைக் கேளுங்கள் என்று கூறி அவரிடம் கதையை விவரித்தேன். கேட்டபின் தான் நடிப்பதாக உடனே சம்மதித்தார்” என்றார்.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர், ராஜ் பகதூர் ராதிகாவின் தந்தையாக நடிக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.