/indian-express-tamil/media/media_files/2025/07/18/lakshmi-ramakrishnan-2025-07-18-17-00-18.jpg)
சமீபத்தில் ரிதன்யாவின் தற்கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வரதட்சனை மற்றும் கணவன் வீட்டார் கொடுமை காரணமாக ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெண்களுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டிய சில அடிப்படை குணநலங்கள் குறித்து நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.
அதன்படி, "கண்மூடித்தனமாக மாமியார் மற்றும் மாமனார் கூறுவதை அப்படியே பின்பற்றி நடக்க வேண்டும் என்று புதிதாக திருமணமான பெண்களுக்கு கற்றுக் கொடுப்பதை, இன்றைய சூழலில் பெரும் ஆபத்தாக நான் கருதுகிறேன். தனக்கு ஒரு பிரச்சனை என்றால், அதற்கு எதிராக குரல் கொடுக்கும் ஆற்றலை பெண்களுக்கு, அவர்களது பெற்றோர் கற்றுத் தர வேண்டும். தற்போதைய சூழலில், பொருளாதார ரீதியாக மற்றவர்களை சார்ந்து இருக்கும் நிலையில் பெண்கள் இருக்கக் கூடாது.
திருமணம் ஆகிச் செல்லும் குடும்பத்தினர் வசதியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் நம்முடைய தேவைக்காக அவர்களிடம் சென்று பணம் கேட்கும் சூழலில் பெண்கள் இருக்கக் கூடாது. ஒரு பிரச்சனை ஏற்பட்டால் மட்டுமே, அது குறித்த விவாதம் எழுப்பப்படுகிறது. ஆனால், பிரச்சனை ஏற்படுவதற்கு முன்னரே அதனை உணரும் தன்மையை பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பிரச்சனைகளை சரியாக புரிந்து கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு வேண்டும்.
சிறு வயதில் இருந்தே பெண் குழந்தைகளுக்கு இந்த விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை. இதேபோன்ற விஷயங்களை ஆண் பிள்ளைகளிடமும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். திருமண வாழ்க்கை என்றாலே விட்டுக் கொடுக்க வேண்டும், சகித்துக் கொள்ள வேண்டும் என்று தொடர்ச்சியாக சொல்கின்றனர். அப்படி இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களை நல்லவர்கள் என்று உதாரணமாக கூறுகிறோம். இதுவே பிரச்சனைகளுக்கு அடித்தளமாக அமைகிறது.
இதற்கு ஒரு உதாரணத்தை கூற நினைக்கிறேன். எனக்கு தெரிந்த ஒரு பெண்ணுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது, அந்தப் பெண் சத்தம் போடவில்லை எனவும், பெண்ணை நன்றாக வளர்த்திருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியதாக, அப்பெண்ணின் தயார் என்னிடம் தெரிவித்தார். ஆனால், இது மிகவும் தவறான விஷயம். உங்களுக்கு கட்டுப்படுத்த முடியாத வகையில் வலி ஏற்பட்டால், சத்தம் போடுவதில் தவறு கிடையாது.
இதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் வலியை சொல்வதற்கு கூட நாம் சுதந்திரம் அளிப்பது இல்லை. பிரசவ வலியில் சத்தம் போடக் கூடாது என்றால் வேறு என்ன கெட்ட வார்த்தையா பேசுவார்கள்? ஒரு பெண் தனது கணவருக்காகவும், குழந்தைகளுக்காகவும் மட்டுமே வாழ வேண்டும் என்று கற்பிக்கப்படுகிறது. தியாக மனப்பான்மையுடன் இருக்க வேண்டும் என்று பெண்களுக்கு சொல்லிக் கொடுப்பதை முதலில் நிறுத்த வேண்டும்" என்று லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.