ஜான் பாபுராஜ்
சென்றவாரம் வெளியான படங்களில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் நடித்துள்ள அஜய் ஞானமுத்துவின் இமைக்கா நொடிகள் நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளது. அதனுடன் வெளியான அண்ணனுக்கு ஜே, 60 வயது மாநிறம் படங்களின் நிலை என்ன என்பதைப் பார்ப்போம்.
ஆருத்ரா
பாடலாசிரியர், நடிகர் பா.விஜய் எழுதி, நடித்து, இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் ஆருத்ரா. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்ற சென்சிடிவ் பிரச்சனையை ஆருத்ராவில் கையிலெடுத்திருக்கிறார். ஆனால், யூகிக்கக் கூடிய கதை, பலவீனமான காட்சிகள் காரணமாக படம் ரசிகர்களை கவரவில்லை. சென்னையில் முதல் மூன்று தினங்களில் சுமார் 65 திரையிடல்களில் 10 லட்சங்ளை வசூலித்துள்ளது. தமிழகம் முழுவதும் இதுவே நிலை. பா.விஜய்யின் தோல்விப் பட்டியலில் ஆருத்ராவும் இடம்பிடித்துள்ளது.
அண்ணனுக்கு ஜே
வெற்றிமாறன் தயாரிப்பில் ராஜ்குமார் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியிருக்கும் படம். தினேஷ் நடித்துள்ளார். ஹீரோயிசமாக சொல்ல வேண்டிய கதையை நகைச்சுவையுடன் சொன்னவிதத்தில் இயக்குநர் பாராட்டுக்குரியவர். ஆனால், அழுத்தமில்லாத அனைவருக்கும் தெரிந்த அரசியல் காட்சிகள் காரணமாக படம் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனாலும், குறிப்பிடத்தகுந்த நல்ல முயற்சி. சென்றவாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் சுமார் 115 திரையிடல்களில் 28.60 லட்சங்களை சென்னையில் வசூலித்துள்ளது. சுமாரான வசூல்.
60 வயது மாநிறம்
கன்னடத்தில் வெளியான படத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள். அதிக விளம்பரமில்லாமல் சட்டென்று வெளியான போதிலும் வித்தியாசமான கதை காரணமாக ரசிகர்கள் படத்தை காண ஆர்வமாக இருப்பது ஆரோக்கியமான விஷயம். ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரகனி நடித்திருக்கும் இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் சுமார் 125 திரையிடல்களில் 33.50 லட்சங்களை சென்னையில் வசூலித்துள்ளது. நகரங்களில் பரவாயில்லாமல் வசூலிக்கும் படம் பி, சி சென்டர்களில் அதிகம் போகாதது ஒரு குறை.
இமைக்கா நொடிகள்
நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இமைக்கா நொடிகளுக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு இருந்தது. படத்தின் அதிகபடியான நீளம், லாஜிக் மீறல் காட்சிகளைத் தாண்டி படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. வியாழன் வெளியான படம் வெள்ளி, சனி, ஞாயிறில் சுமார் 265 திரையிடல்ளில் 1.60 கோடியை தனதாக்கியுள்ளது. வியாழனையும் சேர்த்தால் 1.70 கோடி. சென்னையின் இந்த ஓபனிங் பரவலாக தமிழகம் முழுவதும் கிடைத்திருப்பதால் படம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நயன்தாராவைப் பொறுத்தவரை அறம், கோலமாவு கோகிலா இப்போது இமைக்கா நொடிகள் என தொடர்ந்து 3 ஹிட்கள் தந்திருக்கிறார்.
சென்ற வாரத்துக்கு முந்தைய வாரங்களில் வெளியான படங்களில் சர்ஜுன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் 20 லட்சங்களையும், பியார் பிரேமா காதல் 2.46 கோடிகளையும், பிரபுதேவாவின் லக்ஷ்மி 1.14 கோடியையும் சென்னையில் வசூலித்துள்ளது. இதில் பியார் பிரேமா காதல் தவிர்த்து பிற இரு படங்களும் நஷ்டத்தை சந்தித்துள்ளன.
நயன்தாராவின் கோலமாவு கோகிலா இப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த ஞாயிறுவரை சென்னையில் 5 கோடிகளை வசூலித்துள்ளது. இது விஸ்வரூபம் 2 படத்தின் சென்னை வசூலைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.