சென்ற வாரம் வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி, டெட்பூல் 2 படங்களின் வசூல் நிலவரம்

அடுத்த வாரம் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாததால் இரும்புத்திரை, பாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி படங்களுக்கு மேலும் வசூலிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அடுத்த வாரம் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாததால் இரும்புத்திரை, பாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி படங்களுக்கு மேலும் வசூலிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kaali tamil movie

பாபு

படங்களின் வசூலை பார்க்கும் முன் ஒரு சின்ன தகவல் குறிப்பு. முன்பு தயாரிப்பாளர்கள் அவர்கள் விருப்பத்துக்கு படங்களை வெளியிடுவார்கள். ஒருவாரம் ஒன்றே இரண்டோ படங்கள் வெளியாகும். மறுவாரம் பத்து படங்கள் இன்னைக்கு வந்தே தீருவோம் என முட்டிக் கொண்டு நிற்கும். திரையுலக வேலைநிறுத்தத்துக்குப் பிறகு இதற்கு கடிவாளம் போட்டிருக்கிறார்கள். தணிக்கைச் சான்றிதழ் கிடைத்த தேதியின் அடிப்படையில் படங்கள் வெளியாக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதனால், முன்பு போல் தள்ளு முள்ளு இல்லை. மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமையை சின்ன பட்ஜெட் படங்களுக்கு மட்டும் என ஒதுக்கியிருக்கிறார்கள். அந்த தேதியில் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகாது.

Advertisment

உதாரணமாக இந்த மாதம் சின்ன பட்ஜெட் படங்களுக்கென மே 25 ஆம் தேதியை ஒதுக்கியிருக்கிறார்கள். அந்த தேதியில் அதர்வாவின் செம போத ஆகாத வெளியாகவிருந்தது. இப்போது அதன் வெளியீட்டு தேதியை ஜுன் 14 க்கு மாற்றியிருக்கிறார்கள்.

இந்த தகவல் எதற்காக என்றால், சின்ன பட்ஜெட் படங்களுக்கு இப்போது திரையரங்குகள் கிடைக்கின்றன. எனினும் பாக்ஸ் ஆபிஸில் அவை தொடர்ந்து தோல்வியே அடைகின்றன. முன்னேற்றம் இல்லை.

பல ரிலீஸ் தேதிகளை கண்ட பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை திடீரென்று வியாழக்கிழமையே வெளியிட்டனர். திருச்சிப் பக்கம் புதன்கிழமையே படம் திரைக்கு வந்தது. பாஸ்கர் தி ராஸ்கல் சுமாரான படம். மலையாளத்திலும் வசூல் பெரிதாக இல்லை. அதனை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள். படம் பொறுமையை பலமாக சோதிக்கிறது. அதே நேரம் தமிழகம் முழுவதும் பரவலாக வசூலித்திருக்கிறது. சென்னையில் வெள்ளி, சனி, ஞாயிறு சுமார் 150 திரையிடல்களில் 53.40 லட்சங்களை வசூலித்துள்ளது. வியாழனையும் சேர்த்தால் 72.10 லட்சங்கள். இந்த ஓபனிங்கை படம் வார நாள்களில் படம் தக்க வைக்குமா என்பது கேள்விக்குறியே.

Advertisment
Advertisements

’வணக்கம் சென்னை’ எடுத்த கிருத்திகா உதயநிதியின் இரண்டாவது படம் காளி. இனியேனும் ஸ்கிரிப்ட் செய்யும் பணியை அவர் இன்னொருவரிடம் ஒப்படைக்க வேண்டும். காளியின் கதையும், திரைக்கதையும் பலவீனமானவை. படம் ரசிகர்களை கவர தவறிவிட்டது. கடந்த சில படங்களால் விஜய் ஆண்டனி படங்கள் மீது ரசிகர்களுக்கு இருந்த ஆர்வம் குறைந்துவிட்டது. காளி அதனை தீவிரப்படுத்தும். சென்னையில் காளி முதல் மூன்று தினங்களில் சுமார் 170 திரையிடல்களில் 61.20 லட்சங்களை வசூலித்துள்ளது.

இவ்விரு படங்களைவிட ஹாலிவுட் படமான டெட்பூல் 2 அதிகம் வசூலித்துள்ளது. லோக்கல் விஷயங்களை கோர்த்து படத்துக்கு அமைத்திருக்கும் தமிழ் வசனங்கள் அள்ளுகிறது. முதல் மூன்று தினங்களில் சென்னையில் இப்படம் 96.30 லட்சங்களை வசூலித்துள்ளது. இந்திய அளவில் வெள்ளிக்கிழமை முதல் நாளில் 11.25 கோடிகளும், சனிக்கிழமையில் 10.65 கோடிகளுமாக முதலிரு தினங்களில் 21.90 கோடிகளை வசூலித்துள்ளது.

சென்ற வார படங்களை விட அதற்கு முந்தைய வாரம் வெளியான இரும்புத்திரை, மகாநடி (தெலுங்கு) படங்கள் நல்ல வசூலுடன் ஓடுகின்றன. இரும்புத்திரை சென்னையில் வார நாள்களில் 1.20 கோடியும், வார இறுதியில் 98.32 லட்சங்களும் வசூலித்துள்ளது. முதல்வார ஓபனிங்குடன் ஒப்பிடுகையில் இரண்டாவது வார ஓபனிங் குறைவு என்றாலும் பெரும் சறுக்கல் எதுவும் நேர்ந்துவிடவில்லை. முதல் பத்து தினங்களில் இரும்புத்திரை சென்னையில் மட்டும் 3.46 கோடிகள் வசூலித்து தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனுடன் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள் சென்னையில் நேற்றுவரை சுமார் 1.12 கோடியை வசூலித்துள்ளது.

மகாநடி தெலுங்குப் படம் சென்ற வார இறுதியில் 23.83 லட்சங்களை வசூலித்துள்ளது. நேற்றுவரை இதன் சென்னை வசூல், 1.29 கோடி. நடிகையர் திலகத்தைவிட அதன் தெலுங்குப் பதிப்பு மகாநடியே சென்னையில் நல்ல வசூலை பெற்றுள்ளது.

அடுத்த வாரம் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாததால் இரும்புத்திரை, பாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி படங்களுக்கு மேலும் வசூலிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. காளியும், பாஸ்கரும் அதனை பயன்படுத்திக் கொள்வார்களா என்பதே கேள்வி.

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: