இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தனது 92வது வயதில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவரது மறைவு கோடிக்கணக்கான ரசிகர்களையும், பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், பின்னணி பாடகி சித்ரா’ லதா மங்கேஷ்கருடன் தன்னுடைய நினைவுகள் குறித்து பகிர்ந்துள்ளார்.
கேரளாவில் பல குடும்பங்களைப் போலவே, என் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஹிந்தி பாடல்கள் பிடிக்கும். அதனால், லதாஜி யாரென்று தெரியாவிட்டாலும், சிறுவயதில் இருந்தே அவரது குரல் எனக்குப் பரிட்சயமாக இருந்தது.
லதாஜியின் பிரபலமான ஆல்பங்கள் மற்றும் பதிவுகளின் தொகுப்பு எங்களிடம் இருந்தது, அதில் லண்டனில் இருந்து அவரது பிரபலமான சில பதிவுகள் இருந்தன.
லதாஜியுடனான எனது முதல் சந்திப்பு 1989 இல் நிகழ்ந்தது. தாதாசாகேப் பால்கே விருதை வென்ற பிறகு மெட்ராஸ் தெலுங்கு அகாடமியில் அவருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அந்த விழாவுக்கு நான் அழைக்கப்படவில்லை,
ஆனால் அன்று SPB சாருடன் ஒரு பாடல் பதிவு செய்ய வேண்டியிருந்தது. அப்போது சீக்கிரம் முடித்துவிட்டு நிகழ்ச்சிக்கு கிளம்ப வேண்டும் என்று அவர் சொன்னார். அப்போது என்னையும் அழைத்துச் செல்லும்படி நான் அவரிடம் கெஞ்சினேன், அவர் ஒப்புக்கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்ததும், SPB சார் என்னை லதாஜிக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது அவர், "நீங்கள் பாடுவதை நான் கேட்டிருக்கிறேன்" என்று கூறியது, எனக்கு கிடைத்த மிக முக்கியமான அங்கீகாரம்.
பின்னர், 2004 இல் அவரது 75வது பிறந்தநாளை முன்னிட்டு’ மும்பையில் ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது. கச்சேரி நடக்கும் அன்று நான் மிகவும் டென்ஷனாக இருந்தாலும் அவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
அன்று, நான் ரசிக் பால்மா (சோரி சோரி, 1956) பாடினேன், அது அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவரது 80வது பிறந்தநாளில், நைட்டிங்கேல் என்ற ஆல்பத்தை நான் பதிவு செய்தேன், அதை என் கணவர் லதாஜிக்கு அனுப்பினார்.
சில நாட்களுக்குப் பிறகு, லதாஜி என்னை அழைத்தார். அவருடைய குரலைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன். எல்லாப் பாடல்களையும் கேட்டதாகவும், தனக்குப் பிடித்ததாகவும் சொன்னார்.
என் மகள் இறந்த பிறகு, நான் வீட்டில் அடைந்து கிடந்தேன். அப்போதுதான் 2012ல் லதாஜியின் பெயரில் விருதுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஏற்பாட்டாளர்கள் என்னை அழைத்தபோது, நான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்று கூறினேன். அன்று மாலை லதாஜி என்னை அழைத்தார். அவர் எனக்கு ஆறுதல் கூறினார், நான் உலகத்தை விட்டு விலகக்கூடாது என்று வலியுறுத்தினார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருது வாங்க வேண்டும் என்று என்னிடம் கூறினார். அவரும் வருவார் என்று எனக்கு உறுதியளிக்கப்பட்டது, ஆனால் தனிப்பட்ட காரணங்களால் அவர் வரவில்லை. அதுதான் லதாஜியுடனான எனது கடைசி அழைப்பு என்று பின்னணி பாடகி சித்ரா தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.