/indian-express-tamil/media/media_files/2024/11/06/gTabQxAob8Ww1u3CPEWC.jpg)
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உடன் பல படங்களில் நடித்த நடிகை லதா, சமீபத்தில் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு ஒரு விரிவான நேர்காணலை அளித்துள்ளார். இந்த நேர்காணலில், தனது திரையுலக வாழ்க்கை, எம்.ஜி.ஆர் உடனான தனது ஆழமான அனுபவங்கள் குறித்தும் கூறியுள்ளார்.
நடிகை லதா 70கள் மற்றும் 80களின் காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப்படங்களில் பிசியான நடிகையாக இருந்தவர். கடந்த 1973ம் ஆண்டில் எம்ஜிஆர் லீட் கேரக்டரில் நடித்திருந்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த இவர், அப்போது 9வது வகுப்பு படித்துக் கொண்டிருந்துள்ளார்.
இவரது புகைப்படம் உலகம் சுற்றும் வாலிபன் டீமில் காட்டப்பட, புதுமுகம் ஒருவரை தேடிக் கொண்டிருந்த எம்ஜிஆர், தன்னுடைய அம்மாவை கன்வின்ஸ் செய்து தன்னை நடிக்க வைத்ததாக லதா தனது பேட்டியில் கூறியுள்ளார். தான் முதல்முறை எம்ஜிஆரை பார்த்தபோது அவர் தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக லதா தன்னுடைய வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து தனக்கு எம்ஜிஆர் பிக்சர்ஸ் நிறுவனத்திலேயே நடிப்புப் பயிற்சி கொடுக்கப்பட்டதாகவும் தான் தன்னுடைய அறிமுகப் படத்திலேயே ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு சென்றது மறக்க முடியாத நிகழ்வு என்றும் லதா தெரிவித்துள்ளார். தனக்கு நடிப்பில் மட்டுமில்லாமல் நடனம், பாடி லேங்குவேஜ் உள்ளிட்ட பல விஷயங்களிலும் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் லதா பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக தன்னை 5 வருடம் கான்டிராக்ட் போட்டு ஒப்பந்தம் செய்ததாகவும் லதா தெரிவித்துள்ளார். தான் அறிமுகம் செய்யும் நடிகைகளின் கால்ஷீட்டிற்காக தானே காத்திருக்கும்படி நேர்வதால் அவர் இப்படி ஒப்பந்தம் போட்டதாகவும் லதா குறிப்பிட்டுள்ளார்.
"எனக்கு ஒப்பந்தம் முடிந்ததும் நிறைய படங்களில் வேறு மொழிகளில் எல்லாம் வாய்ப்புகள் வந்து குவிந்தன. ஆனால் நான் எம்.ஜி.ஆரை விட்டு போக மனமில்லை என்று கூறினேன்" என்றார். அவரை கேட்டுத்தான் தான் மற்ற மொழிப் படங்களிலும் நடித்ததாகவும் லதா தெரிவித்துள்ளார். தெலுங்கில் நாகேஷ்வரராவ், என்டி ராமாராவ், மலையாளத்தில் பிரேம் நசீர், மது உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்ததாகவும் லதா கூறியுள்ளார்.
தொடர்ந்து தமிழில் கமல், ரஜினி உள்ளிட்டவர்களுடனும் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போதும் சின்னத்திரையில் நடித்து வருவதையும் குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்திற்கும் எம்ஜிஆர்தான் காரணம் என்றும் அவர் தன்னுடைய ஆசான் என்றும் கூறியுள்ளார். தற்போதும் தன்னை எம்ஜிஆர் லதா என்றுதான் ரசிகர்கள் அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது 18 வயதில் எம்.ஜி.ஆருடனான ஒப்பந்தம் நிறைவடைந்த பிறகு, லதா மற்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கத் தொடங்கினார். அந்த சமயத்தில், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகிலிருந்தும் அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்தன. எம்.ஜி.ஆருடன் நடித்தது குறித்து அவர் குறிப்பிடும்போது, தனக்கு சிவாஜி கணேசன் மற்றும் ரஜினிகாந்த் போன்ற பிரபல நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும், எம்.ஜி.ஆரின் கால்ஷீட் தான் தனக்கு மிகவும் முக்கியம் என்று அவர் கூறியுள்ளார். மேலும், எம்.ஜி.ஆருடனான தனது முதல் ஒப்பந்தம் முடிந்த பிறகும், அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளுக்கு மீண்டும் அவரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.