’லியோ’ படம் உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்து வரும் நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த கிஃப்ட் ஆஃபரை நடிகர் விஜய் வாங்க மறுத்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள லியோ படம் கடந்த 19 ஆம் தேதி வெளியானது.
வெளியானது முதல், ‘லியோ' படம் உலகம் முழுவதும் உள்ள பெரிய திரைகளில் புயலை கிளப்பி வருகிறது, மேலும் படம் அதிகாரப்பூர்வமாக முதல் நாளில் ரூ 148 கோடி வசூலித்து 2023 ஆம் ஆண்டின் அதிக இந்திய வசூல் சாதனை படைத்துள்ளது.
இந்தநிலையில், படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், யூடியூபில் லியோ படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், லியோ வெற்றியைத் தொடர்ந்து விஜய்க்கு பரிசு வழங்க விரும்பினேன். ஆனால் விஜய், அந்த படத்திற்கான சம்பளத்தை ஏற்கனவே வாங்கிவிட்டேன் எனக் கூறி, கிஃப்ட் ஆஃபரை ஏற்க மறுத்தார், என்று கூறியுள்ளார்.
'லியோ' படம் ஹிந்தியில் பிரமாண்ட ரிலீஸ் ஆகாததாலும், பெரிய அளவில் வசூல் கிடைக்கும் என்று படக்குழு எதிர்பார்க்காததாலும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடியை எட்டுவது சாத்தியமற்றது என்று லலித் குமார் கூறியுள்ளார். ரஜினிகாந்த் 'லியோ' படத்தைப் பார்த்துவிட்டு, தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினார் என்று லலித் குமார் கூறினார்.
மேலும் மாநிலத்தில் சிறப்பு காலை காட்சிகளுக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிரான அணுகுமுறை குறித்து தயாரிப்பாளர் லலித் குமார் விளக்கம் அளித்துள்ளார். மற்ற இடங்களைப் போலவே தமிழகத்தில் உள்ள ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் ஒரே நேரத்தில் படத்தை வெளியிட ஆசைப்பட்டோம். ஆனால் நாங்கள் நீதிமன்றத்தை அணுகியது விஜய்க்கு தெரியாது, மேலும் அவர் நீதிமன்றத்திற்கு சென்றது குறித்து கேள்வி எழுப்பினார். 'லியோ' படம் சுமூகமாக வெளிவர வேண்டும் என்று விஜய் ஆசைப்பட்டார், அதனால்தான் படத்தின் ஆடியோ வெளியீட்டை கைவிட ஒப்புக்கொண்டார், என லலித் குமார் கூறினார்.
'லியோ' பட ரிலீஸுக்கு முன் எந்த நிகழ்வும் இல்லாததால், விரைவில் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது. இந்த படம் விஜய்யின் அதிக வசூல் செய்த படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த 5 தமிழ் படங்களில் இடம்பிடிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“