LIC என்பது எங்கள் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வணிக குறியீடு. அதை தவறாக பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என எல்.ஐ.சி படக்குழுவுக்கு எல்.ஐ.சி காப்பீட்டு நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் லவ் டுடே படத்தின் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து லவ் இஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் படத்தை இயக்கி வருகிறார். படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் லவ் இஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் என பெயரிடப்பட்டுள்ள படத்தினை, எல்.ஐ.சி. எனக் குறிப்பிட்டு விளம்பரங்களும் செய்யப்பட்டன.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிர்வாகத்துக்கும், படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எனப்படும் எல்.ஐ.சி நிறுவனம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த நோட்டீஸில், லவ் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற தலைப்பினை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். LIC என்பது எங்கள் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வணிக குறியீடு. அதை தவறாக பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். நோட்டீஸ் பெற்ற ஏழு நாட்களுக்குள் படத்தின் தலைப்பினை மாற்றாவிட்டால் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விக்னேஷ் சிவன் தனது புதிய பெயருக்கு, எல்.ஐ.சி எனப் பெயர் வைப்பதால், தங்கள் நிறுவனம் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் மதிப்பு குறையும் எனவும் எல்.ஐ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“