சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுவது குறித்து பதில் அளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாநகரம் என்ற சிறு பட்ஜெட் படத்தின் மூலம் கவனிக்கப்படும் இயக்குனராக மாறிய லோகேஷ் கனகராஜ் அடுத்து கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் மூலம் முன்னணி இயக்குனராக மாறினார். அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் மாஸ்டர், கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் தற்போது விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், லோகேஷ் அடுத்து இயக்கும் படத்தில் யார் ஹீரோ என்ற பெரும் விவாதம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம், ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படத்தின் இயக்குனர் லோகேஷ் தான் என்று தகவல் வெளியாகியாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இது குறித்து அவர் தற்போது பதில் அளித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்வில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜூடம் லியோ படம் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறினார். கைதி 2 படத்தை எப்போது இயக்குவீர்கள் என்று மாணவர் ஒருவர் கேட்டதற்கு, “லியோ படத்திற்குப் பிறகு நான் இன்னொரு படம் செய்கிறேன், அதற்குப் பிறகு கைதி 2 இருக்கும்” என்று கூறினார்.
இதனிடையே தலைவர் 171 என்று குறிப்பிடப்படும் அவரது அடுத்த படத்திற்காக ரஜினிகாந்துடன் இணைகிறார் என்ற வதந்திகள் குறித்தும் கேட்டபோது அந்த கேள்வியை லோகேஷ் தவிர்த்துவிட்டார், இது குறித்து தயாரிப்பு நிறுவனம் தான் சொல்ல வேண்டும் என்னால் எதுவும் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். எனினும், லோகேஷ் இந்த வதந்திக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. இதனால் கைதி 2 படத்திற்கு முன் ரஜினிகாந்த் நடிக்கும் படமா என்று ரசிகர்கள் இப்போது யூகித்து வருகின்றனர்.
இதனிடையே லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்சின் முதல் படமான கைதி படத்தில் கதாநாயகன் டில்லி (கார்த்தி) தனது மகளுடன் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து செல்வதுடன் முடிந்தது. சிறையில் இருக்கும் அடைக்கலம் டெல்லியை ஏற்கனவே தெரியும் என்று சொல்கிறார். இதனால் டில்லியின் பின்னணியையும் அவரது கடந்த காலத்தையும் படம் கைதி 2 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விக்ரம் படத்தில் கைதியின் டெல்லி கேரக்டர் வந்தது. இதில் அவர் தனது நண்பர் மற்றும் மகளுடன் உத்தரபிரதேசத்தில் கிணறு தோண்டும் காட்சியாக வந்தது. விக்ரம் மற்றும் கைதியின் கதையை லோகேஷ் எப்படி இணைப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதற்கிடையில், அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் லியோ போஸ்ட் புரொடக்ஷன் கட்டத்தில் உள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பரில் நடைபெறும் என லோகேஷ் உறுதிபடத் தெரிவித்துள்ளார். விஜய் தவிர, லியோவில் த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், அனுராக் காஷ்யப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“