சிம்பொனி இசை குறித்து தன்னை சரியான பாதையில் வழிநடத்தியவர் இளையராஜா தான் என லிடியன் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா, கடந்த மார்ச் 8-ஆம் தேதி லண்டனில் தனது சிம்பொனி இசையை அரங்கேற்றினார். இதற்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் இளம் இசைக்கலைஞரான லிடியன், இளையராஜாவின் சிம்பொனிக்கு உதவியாக இருந்ததாக ஒரு வதந்தி பரவியது. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக, இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுருந்தார். அப்போது, லிடியன் தன்னிடம் சிம்பொனி இசை எனக் கூறி ஒன்றை காண்பித்ததாகவும், ஆனால் அது சரியான சிம்பொனி இசை இல்லை என்று தான் கூறியதாகவும் இளையராஜா தெரிவித்திருந்தார்.
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது விளக்கத்தை லிடியன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான நேர்காணல் ஒன்றை அவர் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்தார். அதில், "இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு சிம்பொனி இசைக்காக நான் குறிப்புகள் எழுதிக் கொடுக்கவில்லை. இது தொடர்பாக அவருக்கு நான் எந்த உதவியும் செய்ய இல்லை. அது முழுக்க முழுக்க இளையராஜாவின் இசை தான். முற்றிலுமாக அவரது தீவிர முயற்சியால் உருவானது தான் அந்த இசை.
அவரது சிம்பொனி இசையைக் கேட்க நான் ஆவலாக காத்திருக்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் அவரிடம் பயிற்சிக்காக சென்றிருந்தேன். அப்போது, 'நீதானே என் பொன்வசந்தம்' திரைப்படத்திற்காக எந்த சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா பயன்படுத்துனீர்கள் என இளையராஜாவிடம் நான் கேட்டேன்.
அப்போது, நான் சிம்பொனி செய்ய போகிறேனா என என்னிடம் இளையராஜா கேட்டார். நான் இல்லை என்று பதிலளித்தேன். ஆனால், நானும் இசையைக் கற்றுக் கொண்டு சிம்பொனி செய்து நிறைய விருதுகள் வாங்க வேண்டும் என இளையராஜா அறிவுறுத்தினார். அந்த வார்த்தை எனக்கு உத்வேகம் அளித்தது.
அதன் பின்னர், ஒரு இசையை கம்போஸ் செய்து இளையராஜாவிடம் நான் போட்டுக் காட்டினேன். அது பின்னணி இசையை போன்று இருப்பதாக என்னிடம் இளையராஜா கூறினார். மேலும், சிம்பொனி குறித்து நான் நிறைய படிக்க வேண்டும் என்று என்னிடம் அவர் வலியுறுத்தினார்.
இளையராஜா என்னை சரியாக வழிநடத்தியதால் தான், என்னுடைய தவறை என்னால் சரி செய்து கொள்ள முடிந்தது" எனத் தெரிவித்துள்ளார்.