பாடலாசிரியர் சினேகன் செய்தி வாசிப்பாளரும் பிக் பாஸ் பிரபலமுமான அனிதா சம்பத் இருவரும் புதிய சீரியல் ஒன்றில் ஜோடியாக நடிக்கக் களமிறங்கியுள்ளனர். புது சீரியலின் புரோமோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
பாடலாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர் கவிஞர் சினேகன். எத்தனையோ சூப்பர் ஹிட் பாடல்களை எழுந்தியிருந்தாலும் கவிஞர் சினேகன் பிரபலமானது என்னவோ பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில்தான். பிக் பாஸ் சீசன் 1 நிக்ழ்ச்சியில் கவிஞர் சினேகன் ரன்னர் அப் ஆக 2வது இடத்தைப் பிடித்தார். அதற்குப் பிறகு, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் சினேகன் கலந்து கொண்டார்.
கவிஞர் சினேகன் நடிகை கன்னிகாவை காதலித்து வந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகத்தான் தனது காதலை அறிவித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, கவிஞர் சினேகன், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். கட்சியில் முக்கிய பொறுப்பிலும் உள்ளார். கமல்ஹாசன் தலைமையில்தான், கவிஞர் சினேகன் கன்னிகாவை திருமணம் செய்துகொண்டார்.
கவிஞர் சினேகன் திருமணத்திற்கு பிறகு தனது மனைவி கன்னிகாவுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் ரில்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ஆக்டிவ்வாக இருக்கிறார். அதே நேரத்தில், சினேகன், சினிமாவில் நடித்துக்கொண்டும் இருக்கிறார்.
இந்நிலையில், கவிஞர் சினேகன் - கன்னிகா தம்பதி தாங்கள் அப்பா - அம்மா ஆகப்போகிறோம் என்று கன்னிகா கர்ப்பமாக இருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்தனர். இந்த மகிழ்ச்சியுடன் மேலும் ஒரு மகிழ்ச்சியான விஷயம் கவிஞர் சினேகனுக்கு நடந்துள்ளது.
கவிஞர் சினேகன் கலைஞர் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள பவித்ரா சீரியலில் கதநாயகனாக நடிக்கிறார். இந்த சீரியலில் சினேகனுக்கு ஜோடியாக பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் நடிக்கிறார்.
சினேகன் - அனிதா சம்பத் ஜோடியாக நடிக்கும் கலைஞர் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள, பவித்ரா சீரியலின் புரோமோ வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. பவித்ரா சீரியலின் கதைப்படி அனிதா சம்பத் பணக்கார வீட்டு பெண் போல இருக்கிறார். பாவாடை தாவணி உடையில் இருப்பதால், கிராமத்துக் கதையாக இருக்கலாம். அதாவது, கிராமத்தில் பண்ணையார் மகள் போல இருக்கும் அனிதா சம்பத் வீட்டில் தான் சினேகன் வேலை செய்கிறார். சினேகன் கழுத்தில் துண்டு போட்டுக்கொண்டு கிராமத்துக்காரர் தோற்றத்தில் இருக்கிறார்.
அதே நேரத்தில், இந்த சீரியலில் வில்லியாக சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படத்தில் நடித்த நடிகை ராதா நடிக்கிறார். 2 பிக் பாஸ் பிரபலங்களின் நடிப்பில் கலைஞர் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள பவித்ரா சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“